விரைவில் இந்தியா வருகிறார் டொனால்டு டிரம்ப்: அமெரிக்கத் தூதர் செர்ஜியோ கோர் தகவல்!
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்தியா வருவதற்கு மிகுந்த ஆர்வத்துடன் இருப்பதாக இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதர் செர்ஜியோ கோர் தெரிவித்துள்ளார். சமீபத்தில் அமெரிக்கா மற்றும் இந்தியா இடையே மேற்கொள்ளப்பட்ட இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இது இரு நாடுகளின் பொருளாதார மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
இது குறித்து விரிவாகப் பேசிய செர்ஜியோ கோர், “அதிபர் டிரம்புக்கும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையே மிகச்சிறந்த நட்புறவு நீடிக்கிறது. அதன் காரணமாகவே அதிபர் டிரம்ப் இந்தியாவிற்குப் பயணம் மேற்கொள்ள விரும்புகிறார்” என்று குறிப்பிட்டார். மேலும், அதிபர் டிரம்புடன் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கே ரூபியோவும் உரிய நேரத்தில் இந்தியா வருவார்கள் என்று அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார். இந்த உயர்மட்டப் பயணம் ஆசியப் பிராந்தியத்தில் பெரும் அரசியல் மாற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.