மது போதையில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் உயிரிழப்பு: குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை – காவல்துறை தீவிரம்
விழுப்புரம் அருகே மது போதையில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட தகராறில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய தனிப்படை அமைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.
மழவந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த அய்யனார் என்பவர், கூட்ரோடு பகுதியில் உள்ள அரசு மதுபான கடை அருகே அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது, மாற்று சமூகத்தைச் சேர்ந்த இரண்டு நபர்களுடன் அவருக்கு வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த தகராறு முற்றிய நிலையில், அய்யனாரை அவர்கள் பலமாக தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர், அவரது உடலை தீ வைத்து எரித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இச்சம்பவத்தை அறிந்த உறவினர்கள், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.
தற்போது, குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய தனிப்படை அமைத்து காவல்துறை தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறது.