பிரதமர் மோடி புதிய சேவா தீர்த்தம் அலுவலகத்தை திறந்து வைத்தார்
பழைய பிரதமர் அலுவலகத்தை மாற்றி, ஒருங்கிணைந்த நவீன வளாகம் கையொப்பமிடப்பட்டது
டெல்லியில் பிரதமர் அலுவலகம் மற்றும் மத்திய அமைச்சரவை செயலகங்களுக்கான புதிய வளாகமான சேவா தீர்த்தம் கட்டடத்தை பிரதமர் மோடி இன்று அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார்.
சுதந்திரம் பெறும் முன்பிருந்த காலத்திலிருந்து பிரதமர் அலுவலகம் தெற்கு பிளாக்கில் இயங்கியது. தற்போதைய புதிய வளாகத்தில், பிரதமர் அலுவலகம் மட்டுமின்றி, தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம் மற்றும் மத்திய அமைச்சரவை செயலகம் ஒரே இடத்தில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. காலனித்துவ அடையாளங்களை மாற்றும் முயற்சியாக, இந்த கட்டடத்திற்கு “சேவா தீர்த்தம்” என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதேபோல், மத்திய செயலக கட்டடங்களுக்கு “கர்த்தவ்ய பவன்” என்றும் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
புதிய அலுவலகத்தில் பிரதமர் மோடி, விநாயகர் சிலைக்கு மாலை அணிவித்து பூஜை செய்து, முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டு பணியை தொடங்கினார். இதில், சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 1.5 லட்சம் ரூபாய் வரை ரொக்கமில்லா சிகிச்சை, மகளிர் சுய உதவிக் குழுக்களின் இலக்கை 3 கோடியிலிருந்து 6 கோடியாக உயர்த்தும் திட்டம், மற்றும் விவசாயக் கட்டமைப்பு நிதி ஒதுக்கீட்டை 1 லட்சம் கோடியிலிருந்து 2 லட்சம் கோடியாக உயர்த்தும் திட்டம் ஆகியவை அடங்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார்.
பிரதமர் அலுவலகத்திற்கு புதிய முகவரி கிடைத்த நிலையில், தற்போது காலியாகியுள்ள தெற்கு மற்றும் வடக்கு பிளாக் கட்டடங்கள் பிரான்ஸ் நாட்டின் ஒத்துழைப்பில் பிரம்மாண்ட அருங்காட்சியகமாக மாற்றப்படவுள்ளன.