“திமுக கூட்டணியில் இருந்து விலக வேண்டும் என 90% காங்கிரசார்கள் விருப்பம்” – விஜயதரணி கருத்து
திமுக–காங்கிரஸ் உறவில் பிளவு ஏற்பட்டுள்ளதாகவும், பெரும்பாலான காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என்ற மனநிலையிலுள்ளதாகவும் பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் விஜயதரணி தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் திக்குறிச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “காங்கிரஸ் கட்சி தேவையில்லை என்ற எண்ணம் திமுகவில் உருவாகியிருக்கலாம்” என்று கூறினார்.
மேலும், திமுக–காங்கிரஸ் உறவில் விரிசல் தென்படுவதாகவும், சுமார் 90 சதவீத காங்கிரஸ் ஆதரவாளர்கள் கூட்டணியை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
அதேபோல், ‘இந்தி’ கூட்டணியில் காங்கிரஸுக்கு முன்னுரிமை அளிக்கப்படவில்லை என்றும், அமைச்சர்கள் வாயிலாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதன் மூலம் காங்கிரஸ் தானாகவே கூட்டணியில் இருந்து விலகும் சூழலை உருவாக்க முயற்சி நடைபெறுகிறது எனவும் விஜயதரணி குற்றம்சாட்டினார்.