நாடாளுமன்றம் வன்முறை அரசியலுக்கான மேடை அல்ல – எதிர்க்கட்சிக்கு கிரண் ரிஜிஜூ எச்சரிக்கை
நாடாளுமன்றம் குழப்பம் அல்லது ரவுடி நடவடிக்கைகளுக்கான இடமல்ல என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ எதிர்க்கட்சி உறுப்பினர்களை கடுமையாக எச்சரித்துள்ளார்.
டெல்லியில் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, மக்களவையில் தொடர்ந்து உருவாகும் அமளிகளுக்கு காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்களே பிரதான காரணம் என்றும், சபையில் சீரான மற்றும் பயனுள்ள விவாதம் நடைபெறுவதை ராகுல் காந்தி விரும்பவில்லை என்றும் விமர்சனம் செய்தார்.
எதிர்க்கட்சியினர் மக்களவையின் செயல்பாட்டை தடை செய்ததால், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் குறித்த விவாதம் முறையாக நடைபெற முடியவில்லை என்றும் அவர் கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடி அவைக்கு வர வேண்டாம் என்று சபாநாயகர் அறிவுறுத்தியது சரியான முடிவே என்றும், பிரதமர் அவைக்கு வந்தால் அவரது கையிலிருந்த ஆவணங்களை பிடுங்க முயற்சி செய்யும் திட்டம் இருந்ததாகவும் கிரண் ரிஜிஜூ குற்றம்சாட்டினார்.
மேலும், நாடாளுமன்றம் என்பது ரவுடித்தனம் அல்லது சட்டவிரோத செயல்களுக்கு உரிய இடமல்ல என்பதை வலியுறுத்திய அவர், எதிர்க்கட்சியினர் விதிகளை மீறி நடந்துகொண்டபோதும் மத்திய அரசு அமைதியுடனும் பொறுமையுடனும் செயல்பட்டு வருவதாக தனது கருத்தில் தெரிவித்தார்.