திமுக தலைமையின் திடீர் தீர்மானம் – கூட்டணிக் கட்சிகளில் பதற்றம்
தேர்தல் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பிறகே தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைக்கான குழு அமைக்கப்படும் என திமுக தலைமை முடிவு எடுத்துள்ளதால், அதன் கூட்டணி கட்சிகளில் குழப்பமும் கவலையும் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், பல அரசியல் கட்சிகள் தொகுதி ஒதுக்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த குழுக்களை அமைக்க தீவிரமாக முயன்று வருகின்றன.
இந்த நிலையில், தேர்தல் அறிவிப்பு வெளியாகும் வரை பேச்சுவார்த்தையைத் தள்ளிவைக்க திமுக தலைமை தீர்மானித்துள்ளதாக கூறப்படுவது, கடந்த இரண்டு மாதங்களாக பேச்சுவார்த்தைக்காக காத்திருக்கும் கூட்டணி கட்சிகளை ஏமாற்றமடையச் செய்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக அதிக தொகுதிகளை கோரி அழுத்தம் கொடுத்து வந்த கூட்டணிக் கட்சிகளுக்கு, திமுக தலைமையின் இந்த முடிவு அதிர்ச்சியாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், கூட்டணியில் இருந்து கட்சிகள் விலகாமல் தடுக்கவே திமுக இந்த யோசனையை முன்னெடுத்துள்ளதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.