பாமக உள்கட்சி பிரச்சினை வழக்கு – மறுபரிசீலனை கோரி தேர்தல் ஆணையம் மனு
பாமக கட்சியின் உள்கட்சி விவகாரம் தொடர்பாக வழங்கப்பட்ட தீர்ப்பை மீண்டும் பரிசீலிக்க வேண்டும் எனக் கோரி, தேர்தல் ஆணையம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மறுஆய்வு மனுவை தாக்கல் செய்துள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தொடர்ந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி மினி புஷ்கர்னா, அங்கீகாரம் பெறாத அரசியல் கட்சிகளின் உள் விவகாரங்களில் தேர்தல் ஆணையம் தலையிடவோ, முடிவெடுக்கவோ முடியாது என்று தெரிவித்திருந்தார். மேலும், கட்சியின் உரிமை தொடர்பான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு, அன்புமணி ராமதாஸ் மற்றும் ராமதாஸ் தரப்பினர் சிவில் நீதிமன்றத்தை அணுக வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவுக்கு எதிராக, பாமக உள்கட்சி விவகாரம் தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன், தேர்தல் ஆணையம் தற்போது டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளது. இந்த மனு, நீதிபதி மினி புஷ்கர்னா முன் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.