விமர்சனங்களுக்கு செயலால் பதிலளிப்போம் – திமுக எம்எல்ஏ தளபதிக்கு பதிலடி கொடுத்த காங்கிரஸ் மாவட்ட தலைவர்
மதுரை மாநகரில் உள்ள 1,856 வாக்குச் சாவடிகளில், அடுத்த 15 நாட்களுக்குள் காங்கிரஸ் கட்சியின் முகவர்களை நியமிக்க உள்ளதாக, காங்கிரஸ் மதுரை மாவட்ட தலைவர் நல்லமணி தெரிவித்துள்ளார். இதன் மூலம் திமுக எம்எல்ஏ தளபதி முன்வைத்த விமர்சனங்களுக்கு நேரடியாக பதிலளித்துள்ளார்.
சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் மதுரை மாவட்ட தலைவராக நல்லமணி பொறுப்பேற்றதை தொடர்ந்து, அதற்கான பதவியேற்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி, காங்கிரஸை கடுமையாக விமர்சித்ததாக கூறப்படும் திமுக எம்எல்ஏ தளபதியின் அலுவலகம் அமைந்துள்ள தங்கும் விடுதி வளாகத்திற்கு முன்பாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
பதவியேற்பு நிகழ்ச்சியில் உரையாற்றிய நல்லமணி, வருங்காலத்தில் மதுரை தொகுதியில் காங்கிரஸ் கட்சியிலிருந்து கட்டாயம் ஒரு சட்டமன்ற உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும், மாநகராட்சி தேர்தலில் குறைந்தது 20 கவுன்சிலர் பதவிகள் காங்கிரஸ் வசம் வரும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும், காங்கிரஸ் கட்சியை இழிவுபடுத்தி பேசுவோருக்கு வார்த்தைகளால் அல்ல, செயல்பாடுகளின் மூலம் தகுந்த பதில் வழங்கப்படும் எனவும் அவர் உறுதியாக தெரிவித்தார்.