சீனாவுடன் பிரிட்டன் வர்த்தக தொடர்பு அபாயகரம் – ட்ரம்ப் கடும் விமர்சனம்
சீனாவுடன் பிரிட்டன் வர்த்தக உறவுகளை வளர்த்துக் கொள்வது மிகுந்த ஆபத்தை ஏற்படுத்தும் செயல் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
அமெரிக்கா மேற்கொண்டு வரும் புதிய வர்த்தகக் கொள்கைகள் மற்றும் வரி விதிப்பு தொடர்பான எச்சரிக்கைகள் காரணமாக, தென் கொரியா, கனடா, பின்லாந்து உள்ளிட்ட நாடுகளைத் தொடர்ந்து, பிரிட்டனும் சீனாவுடன் நெருங்கிய உறவை உருவாக்க முயற்சித்து வருகிறது.
இந்த நிலையில், சுமார் 8 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டார்மர், சீனாவுக்கு அதிகாரப்பூர்வ அரசுமுறைப் பயணமாக சென்றார். இருநாடுகளுக்கிடையே நடைபெற்ற சுமார் 80 நிமிடங்கள் நீடித்த பேச்சுவார்த்தையில், வர்த்தகம், பாதுகாப்பு, பருவநிலை மாற்றம் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளி நாடுகள் சீனாவுடன் வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவது, அமெரிக்க நிர்வாகத்தை கடும் எரிச்சலுக்கு உள்ளாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக, சீனாவுடன் பிரிட்டன் வர்த்தக தொடர்புகளை வைத்திருப்பது மிகுந்த அபாயத்தை உருவாக்கும் என ட்ரம்ப் விமர்சித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், சீனாவைத் தன்னால் நன்றாக அறிந்திருப்பதாகவும், சீனாவை எந்தவிதத்திலும் ஒரு தீர்வாக பார்க்க முடியாது என்றும் தெரிவித்தார்.