குமாரபாளையம் தனியார் கல்லூரியில் உணவு தரம் குறித்து மாணவர்கள் கடும் எதிர்ப்பு
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் அமைந்துள்ள ஒரு தனியார் கல்லூரியில், விடுதியில் வழங்கப்படும் உணவு தரமற்றதாக இருப்பதாக கூறி மாணவர்கள் இரவு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த எதிர்ப்புப் போராட்டத்தின் போது, கல்லூரி கட்டடத்தின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
குமாரபாளையத்தில் இயங்கி வரும் எக்ஸல் கல்லூரியில், தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களும் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்நிலையில், விடுதியில் வழங்கப்பட்ட உணவு தரமின்றி இருந்ததாகவும், அந்த உணவை உண்ட 400-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வாந்தி மற்றும் தலைசுற்றல் போன்ற உடல்நலக் குறைபாடுகள் ஏற்பட்டதாகவும் மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறி, நிர்வாகத்தை கண்டித்து மாணவர்கள் இரவு முழுவதும் போராட்டம் நடத்தினர். போராட்டத்தின் போது சில மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் உள்ள கட்டட கண்ணாடிகளை உடைத்தனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் தடுக்கும் வகையில் கல்லூரி வளாகத்தில் அதிக எண்ணிக்கையிலான காவல்துறையினர் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனர்.