தமிழக பாஜக சமூக ஊடக நிர்வாகி பிரவீன் ராஜ் கைது – நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம்
தமிழக பாஜக சமூக ஊடகப்பிரிவு நிர்வாகி பிரவீன் ராஜ் கைது செய்யப்பட்டதற்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வடமாநிலத்தைச் சேர்ந்த ஒரு குடும்பம் முழுவதுமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து சமூகப் பொறுப்புடன் எக்ஸ் தளத்தில் கருத்து பதிவிட்டதற்காக, தமிழக பாஜக சமூக ஊடகப்பிரிவு நிர்வாகியான பிரவீன் ராஜ் மீது நடவடிக்கை எடுத்து, அவரை திமுகவின் கட்டுப்பாட்டிலுள்ள காவல்துறை கைது செய்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது என தெரிவித்துள்ளார்.
பிரவீன் ராஜ் கைது செய்யப்பட்ட செய்தியை அறிந்தவுடன், அவருடைய குடும்பத்தினரிடம் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு ஆறுதல் தெரிவித்ததாகவும், இந்த விவகாரத்தில் சட்டரீதியாக முழுமையாக துணை நிற்போம் என உறுதியளித்துள்ளதாகவும் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்கெட்டு, மாநிலம் முழுவதும் கொலை, கொள்ளை, பாலியல் வன்முறை உள்ளிட்ட குற்றங்கள் தினசரி நடைபெற்று வரும் நிலையில், அவற்றைத் தடுக்கத் தவறிய அரசு, சமூக வலைதளங்களில் கருத்து பதிவிடுவோரை மட்டும் குறிவைத்து கைது செய்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
முதல்வரின் இந்த துருப்பிடித்த இரும்புக் கர ஆட்சி, மக்கள் ஆதரவுடன் விரைவில் தூக்கி எறியப்படும் என்றும் நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.