ஓசூர் அருகே வெளிச்சத்துக்கு வந்த 900 ஆண்டு பழமையான சிவாலயம்!
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஓசூர் புறநகர் பகுதியில், சுமார் 900 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான சிவன் கோயில் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.
ஓசூரை அடுத்த பெகிலி கிராமப் பகுதியில், மண்ணுக்குள் அரைபகுதி புதைந்த நிலையில் இருந்த இந்த சிவாலயத்தை, அரசுப் பள்ளி ஆசிரியரும் தொல்லியல் ஆய்வாளருமான ஜெயலட்சுமி கண்டுபிடித்துள்ளார். ஆய்வில், இந்த கோயில் கி.பி. 11-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பிற்கால சோழர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டதாக தெரியவந்துள்ளது.
முழுமையாக கற்களால் உருவாக்கப்பட்ட இந்த ஆலயம், நீண்ட காலமாக ஆலமரத்தின் வேர்களால் சூழப்பட்டு மறைந்திருந்தது. தற்போது அந்த வேர்கள் அகற்றப்பட்டு, கோயிலுக்குள் செல்லும் வகையில் பாதை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இக்கோயிலை சீரமைத்து புதுப்பித்து, பொதுமக்கள் வழிபடக்கூடிய வகையில் பாதுகாக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.