நாட்டின் முன்னேற்றத்திற்காக எம்பிக்கள் முழு அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும் : பிரதமர் மோடி
நாட்டின் வளர்ச்சியை இலக்காகக் கொண்டு மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த பிரதமர், குடியரசுத் தலைவரின் உரை 140 கோடி இந்தியர்களின் நம்பிக்கை மற்றும் கனவுகளை பிரதிபலிக்கும் வகையில் அமைந்ததாக தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இடையே கையெழுத்தான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், புதிய வாய்ப்புகளுக்கான தொடக்கமாக அமைந்துள்ளதாகக் கூறிய அவர், இளைஞர்களின் எதிர்கால வளர்ச்சிக்கு இந்த ஒப்பந்தம் பெரும் ஆதாரமாக இருக்கும் எனவும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து 9வது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யும் முதல் பெண் நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் திகழ்வதை பாராட்டிய பிரதமர், நாட்டின் நீண்டகால வளர்ச்சியை மனதில் கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினார்.
மேலும், மக்களின் கருத்துகள் மற்றும் கோரிக்கைகள் பிரதிபலிக்கும் வகையில் நாடாளுமன்றம் செயல்பட வேண்டும் என்றும், ஆக்கபூர்வமான விவாதங்களுக்கு மத்திய அரசு எப்போதும் தயாராக உள்ளது என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.