தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறி – அண்ணாமலை குற்றச்சாட்டு
சென்னை அரசு கலைக் கல்லூரியில் உள்ள கேண்டீனில் பணியாற்றி வந்த 22 வயது இளம்பெண், மூன்று நபர்களால் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு தொடர்ந்து சீர்குலைந்து வருவதாகவும், கல்வி நிறுவனங்களில்கூட பெண்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பது மிகுந்த அச்சத்தை ஏற்படுத்துவதாகவும் கூறியுள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலின் பொதுமேடைகளில் தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பாக இருப்பதாக எத்தனை முறை கூறினாலும், தினமும் வெளிவரும் இதுபோன்ற சம்பவங்கள் உண்மை நிலை முற்றிலும் வேறுபட்டது என்பதை நிரூபிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
முதலில் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற கடுமையான யதார்த்தத்தை திமுக அரசு ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும், அதன்பிறகே உரிய தீர்வு நடவடிக்கைகளை திட்டமிட முடியும் என்றும் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். யதார்த்தத்தை மறுத்துவிட்டு, கற்பனை உலகில் அமர்ந்து பிறர் எழுதித் தரும் உரைகளை வாசிப்பது முதலமைச்சரின் பொறுப்பு அல்ல என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
கட்டுப்பாடின்றி பரவி வரும் போதைப்பொருள் பழக்கம் சமூகத்தில் மிகப்பெரிய வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும், அதனுடைய விளைவாக பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
கொலை, கொள்ளை, பாலியல் வன்முறை உள்ளிட்ட குற்றச்செயல்கள் அதிகரித்திருப்பது திமுக அரசின் செயலற்ற தன்மையை வெளிப்படுத்துவதாகவும், அமைதியான தமிழகத்தை இந்த ஆட்சி சீரழித்துவிட்டதாகவும் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தால்தான் இத்தகைய சம்பவங்களை தடுக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால், தமிழகத்தில் மட்டும் குற்றச்சாட்டுக்குள்ளானவர்கள் திமுக அமைச்சர்களுடன் அணைத்துக் கொண்டு புகைப்படம் எடுத்து வெளியிடும் அவலம் நடக்கிறது என்றும், அந்தக் குற்றவாளிகளை காப்பாற்ற அரசு எந்த எல்லைக்கும் செல்வதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
இதுபோன்ற சூழலில் குற்றவாளிகளுக்கு பயம் எப்படி உருவாகும்? பொதுமக்களுக்குத்தான் அச்சம் ஏற்படுகிறது என்றும், திமுக ஆட்சியின் இருண்ட காலம் இன்னும் சில நாட்களில் முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கையே தற்போது தமிழக மக்களுக்கு ஓரளவு ஆறுதலாக இருப்பதாகவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.