தனியார் மின்சார பேருந்துகள் பராமரிப்பு செலவில் தமிழக அரசு அதிக கட்டணம் செலுத்துகிறது – ஓய்வுபெற்ற அதிகாரிகள் குற்றச்சாட்டு
தனியார் நிறுவனங்கள் இயக்கும் மின்சார பேருந்துகளின் பராமரிப்பு செலவுக்காக, மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு அரசு கூடுதல் தொகை வழங்கி வருவதாக ஓய்வுபெற்ற போக்குவரத்துத் துறை அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் மூலம், ஒப்பந்த முறையில் தனியார் மின்சார பேருந்துகளை இயக்கும் திட்டம் கடந்த ஆண்டு முதன்முறையாக சென்னை நகரில் தொடங்கப்பட்டது.
சென்னையில் தற்போது இயக்கப்படும் 380 தனியார் மின்சார பேருந்துகளின் பராமரிப்பு பணிகளுக்காக, சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் இரண்டு ஆண்டுகளுக்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் படி, ஏசி இல்லாத மின்சார பேருந்துகளுக்கு ஒரு கிலோமீட்டருக்கு 77 ரூபாய் 16 காசுகளும், ஏசி வசதியுள்ள பேருந்துகளுக்கு 80 ரூபாய் 86 காசுகளும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு சராசரியாக 200 கிலோமீட்டர் இயக்கப்படும் வகையில் அரசு ஒப்பந்தம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டணம், பிற மாநிலங்களில் வழங்கப்படும் தொகையை விட சுமார் 22 ரூபாய் வரை அதிகமாக உள்ளதாக ஓய்வுபெற்ற அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். பொதுவாக ஒரு பேருந்துக்கு நாள்தோறும் அதிகபட்சமாக 7 ஆயிரம் ரூபாய் மட்டுமே வாடகை நிர்ணயிக்கப்படும் நிலையில், மின்சார பேருந்துகளுக்காக தனியார் நிறுவனங்களுக்கு அரசு தரப்பில் 11 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
இத்தகைய நடவடிக்கைகள், அரசு போக்குவரத்துக் கழகங்களின் நிதி நிலைமையை மேம்படுத்தாமல், மறைமுக ஊழலுக்கு வாய்ப்பளிக்கும் அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், அரசு போக்குவரத்துக் கழகங்களில் காலத்திற்கு ஏற்ற சீர்திருத்தங்கள் அவசியம் என்றாலும், தற்போதைய செயல்பாடுகள் ஆக்கப்பூர்வமான பாதையில் செல்லாமல், எதிர்மாறாக கழகங்களை அழிவின் விளிம்பிற்கு கொண்டு செல்லக் கூடாது என்றும் ஓய்வுபெற்ற போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தங்களது கருத்தை தெரிவித்துள்ளனர்.