குடியரசு தின விழாவில் வெளிப்பட்ட நிர்வாகக் குழப்பம்
குடியரசு தின நிகழ்ச்சியில் வழங்கப்பட வேண்டிய பதக்கங்கள் நேரத்தில் தயாராகாமல் போனதால், இரவல் பதக்கங்களை பயன்படுத்தி விழா நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அவலமாக மாறியுள்ளது.
தமிழக காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு, குடியரசு தினம் மற்றும் சுதந்திர தின விழாக்களில் முதலமைச்சரின் பதக்கம் வழங்கப்படுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு பதக்கங்கள் உரிய காலத்தில் தயாராகி வராததால், பல மாவட்டங்களில் குடியரசு தின விழாக்கள் கடும் குழப்பத்துடன் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக, நெல்லை மாவட்டத்தில் காவல்துறையினருக்கு வழங்க வேண்டிய முதலமைச்சரின் பதக்கங்கள் தயாராகாததால், விழா மேடையில் பதக்கங்களை வழங்க முடியாமல் மாவட்ட நிர்வாகம் திணறியது. இதனால், முந்தைய ஆண்டுகளில் பதக்கம் பெற்றிருந்த போலீசாரின் வீடுகளுக்குச் சென்று பழைய பதக்கங்களை வாங்கி வந்து விழாவில் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.
அவ்வாறு இரவல் பெற்ற பதக்கங்களை, நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரசன்னகுமார் முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் சுகுமார் காவலர்களுக்கு அணிவித்தார். இருப்பினும், அந்த இரவல் பதக்கங்களும் போதிய அளவில் இல்லாததால், விழா நடைபெறும் போது அதிகாரிகளும் காவலர்களும் என்ன செய்வது என தெரியாமல் குழப்பமடைந்தனர்.
இறுதியாக, முதல் வரிசையில் பதக்கம் பெற்றிருந்த போலீசாரிடமிருந்து மீண்டும் பதக்கங்களை இரவல் வாங்கி, மற்ற காவலர்களுக்கு அணிவிக்க வேண்டிய அவலம் ஏற்பட்டது.
குடியரசு தினம் போன்ற முக்கியமான தேசிய விழாவில், இரவல் பதக்கங்களை பயன்படுத்தி மாவட்ட ஆட்சியர் காவலர்களுக்கு பதக்கம் அணிவித்த சம்பவம், காவல் துறையினர் மத்தியில் கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.