“குற்றவாளிகளை பாதுகாப்பதே திமுக ஆட்சியின் நோக்கம்” – அண்ணாமலை கடும் குற்றச்சாட்டு
சேலம் மேச்சேரியில் திமுக நிர்வாகி பிரசாந்த், அவரது தாயார் மற்றும் சகோதரர் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டை முன்வைத்து, திமுக அரசு குற்றவாளிகளை காப்பாற்றுவதற்காகவே செயல்பட்டு வருவதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், திமுக நிர்வாகிகள் சட்டத்தையும் காவல் துறையையும் அச்சுறுத்துவது இப்போது சாதாரண நிகழ்வாக மாறிவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். திமுக ஆட்சிக்காலத்தில், சட்டம் என்பது பொதுமக்களுக்காக அல்ல; திமுகவினரின் சட்டவிரோத செயல்களுக்கு ஆதரவாகவே செயல்படுகிறது என அவர் தெரிவித்துள்ளார்.
திமுக கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தால், எத்தகைய குற்றங்களை செய்தாலும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படாது என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இது தற்போதைய ஆட்சியில் நடைபெறும் அதிகார துஷ்பிரயோகத்தின் மற்றொரு எடுத்துக்காட்டு என்றும் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.
மேலும், குற்றவாளிகளை பாதுகாப்பதே திமுக அரசின் பிரதான பணியாக மாறியுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
சேலம் மாவட்ட நிர்வாகமும் காவல் துறையும் உடனடியாக இந்த சட்டவிரோத மதுபான விற்பனையை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், சட்டமும் காவல் துறையும் பொதுமக்களுக்கு பாதுகாப்பளிப்பதற்காகவே உள்ளன; ஆளும் கட்சியினரின் முறைகேடுகளுக்கு துணை நிற்பதற்காக அல்ல என்றும் அண்ணாமலை கடும் வார்த்தைகளில் தெரிவித்துள்ளார்.