வெயிலால் நாசமான நெற்பயிர்கள் – காப்பீட்டு இழப்பீடு வழங்கக் கோரி விவசாயிகள் போராட்டம்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி சுற்றுவட்டார பகுதிகளில் மழையின்மை காரணமாக சேதமடைந்த நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் வித்தியாசமான முறையில் போராட்டம் நடத்தினர்.
கமுதியை அடுத்த முஷ்டக்குறிச்சி, பெருமாள் குடும்பம்பட்டி, ஆசூர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 5,000 ஏக்கர் பரப்பளவில் மானாவாரி நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டது.
ஆனால் பருவமழை போதிய அளவில் பெய்யாததால், பயிர்களுக்கு தேவையான நீர் கிடைக்காமல் நெற்பயிர்கள் முற்றிலும் கருகி அழிந்தன. இதனால் கடன் பெற்று விவசாயம் செய்த விவசாயிகள் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளனர்.
இந்த நிலையில், மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடியாக பயிர் காப்பீட்டு இழப்பீட்டை வழங்க வேண்டும் என வலியுறுத்தி, கருகிய நெற்கதிர்கள் மற்றும் சாப்பாட்டு தட்டுகளை கைகளில் ஏந்தியபடி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.