குளத்தில் வீசப்பட்ட முருகன் சிலை – அர்ச்சகரின் செயல் அம்பலம், விசாரணையில் அதிகாரிகள்
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள பழமையான முருகன் கோயிலில், அங்கு இருந்த தொன்மையான சிலையை அகற்றி புதிய சிலையை நிறுவியதாக எழுந்த புகாரின் அடிப்படையில், கோயில் அர்ச்சகரை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தோகை மலைப் பகுதியில், பாண்டிய மன்னர்களின் காலத்தில் கட்டப்பட்டதாக கூறப்படும் பாலதண்டாயுதபாணி திருக்கோயிலில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, போகர் சித்தரால் உருவாக்கப்பட்டதாக நம்பப்படும் பழமையான முருகப்பெருமான் சிலை காணாமல் போய், அதன் இடத்தில் புதிய சிலை வைக்கப்பட்டிருப்பதை பார்த்த பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக பக்தர்கள் அறநிலையத்துறையில் முறையிட்டனர். புகாரின் அடிப்படையில், கோயில் அர்ச்சகரான கிருஷ்ணமூர்த்தி என்பவரை அதிகாரிகள் அழைத்து விசாரித்தனர்.
விசாரணையின் போது, அர்ச்சகர் அளித்த தகவலின் பேரில், கோயில் குளத்தின் சுனை நீருக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த பழைய முருகன் சிலையை அதிகாரிகள் மீட்டனர். கிராம மக்கள் நலனும், வளமுமாக இருக்க வேண்டும் என்பதற்காக, ஆண்டி கோலத்தில் இருந்த சிலையை அகற்றி, ராஜகோலத்தில் உள்ள முருகன் சிலையை நிறுவியதாக அர்ச்சகர் விளக்கம் அளித்துள்ளார்.
இந்த நிலையில், கோயிலுக்குச் சொந்தமானதாக கூறப்படும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் மாயமாகியுள்ளன என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இது தொடர்பாகவும் தனி விசாரணை நடத்த வேண்டும் என பக்தர்கள் அறநிலையத்துறையிடம் வலியுறுத்தி வருகின்றனர்.