திருப்பரங்குன்றம் சம்பவம் – உயிர்நீத்த பூர்ண சந்திரனுக்கு மலை உச்சியில் மோட்ச தீபம் ஏற்றிய மக்கள்
திருப்பரங்குன்றம் மலைப்பகுதியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன் தொடர்புடைய விவகாரத்தில் தற்கொலை செய்து கொண்ட பூர்ண சந்திரனின் நினைவாக, கிராம மக்கள் மலை உச்சியில் மோட்ச தீபம் ஏற்றி மரியாதை செலுத்தினர்.
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் தலமாக விளங்கும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் மலையின் உச்சியில் அமைந்துள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், தீபம் ஏற்ற அனுமதி வழங்கி உத்தரவிட்டிருந்தார்.
எனினும், அந்த நீதிமன்ற உத்தரவை மாவட்ட நிர்வாகம் நடைமுறைப்படுத்தவில்லை என கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மதுரை நரிமேடு பகுதியைச் சேர்ந்த பூர்ண சந்திரன் தீக்குளித்து உயிரிழந்தார்.
இந்த நிலையில், அவரது மறைவின் 30-ஆம் நாள் நினைவு நாளை அனுசரிக்கும் வகையில், திருப்பரங்குன்றம் மலைப்பகுதியில் கிராம மக்கள் ஒன்று திரண்டு மோட்ச தீபம் ஏற்றி துக்கம் தெரிவித்தனர்.