ஆன்லைன் டோக்கன் முறையை நீக்க வேண்டும் – முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வலியுறுத்தல்
ஆன்லைன் டோக்கன் நடைமுறை நீக்கப்பட்டால்தான் ஜல்லிக்கட்டு போட்டிகள் முழுக் காலத்திலும் தொடர்ச்சியாக நடைபெற முடியும் என முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம் சூரியூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை நேரில் பார்வையிட்ட அவர், அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, பொங்கல் திருநாள் வந்தாலே உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் ஆவலுடன் எதிர்நோக்கும் விளையாட்டு ஜல்லிக்கட்டுதான் என அவர் குறிப்பிட்டார்.
தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் தாமதமின்றி நடத்த உரிய அனுமதி வழங்க வேண்டும் என்றும், தற்போதுள்ள ஆன்லைன் டோக்கன் முறையை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் அரசை கேட்டுக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து பேசிய பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், கடந்த காலத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளைத் தடை செய்யும் வகையில் காங்கிரஸ் கட்சி சட்டம் இயற்றியதாக விமர்சித்தார்.
ஆனால், அதிமுக ஆட்சி நடைபெற்ற காலத்தில், மக்களின் கோரிக்கையை ஏற்று ஜல்லிக்கட்டு போட்டிகளை மீண்டும் நடத்துவதற்கு பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக அனுமதி வழங்கியதாகவும் அவர் தெரிவித்தார்.