நெல்லையில் சட்டவிரோத துப்பாக்கி விற்பனை – இருவர் கைது
நெல்லை மாவட்டத்தில் கள்ளத் துப்பாக்கி விற்பனையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இருவரை காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலப்பாளையம் பகுதியில் சட்டவிரோதமாக துப்பாக்கி விற்பனை செய்யப்படுவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து, உடனடியாக அப்பகுதியில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அப்போது, திமுகவைச் சேர்ந்த ஒரு கவுன்சிலரின் நண்பர் எனக் கூறப்படும் ரத்னபாலா மற்றும் ஆமீர் சோகைன் என்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், வட மாநிலத்திலிருந்து துப்பாக்கியை வாங்கி வந்து, திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் விற்பனை செய்ததாக தெரியவந்துள்ளது.
ஆனால், அந்த துப்பாக்கி முறையாக செயல்படாத காரணத்தால், அதை மீண்டும் திரும்பப் பெற்று, சமூக வலைதளங்கள் வழியாக மறுவிற்பனை செய்ய முயன்றதும் போலீஸ் விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இந்த விவகாரத்தில் மேலும் யாரேனும் தொடர்புடையவர்களா என்ற கோணத்தில், காவல்துறையினர் விசாரணையை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.