ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம் : சீமான் அதிரடி அறிக்கை
மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், கட்சி, அரசியல், கொள்கை வேறுபாடுகளை எல்லாம் தாண்டி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு துணை நிற்போம் என உறுதியாக தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சீமான் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) சமூக வலைதளப் பதிவில், “மும்பைக்கு வந்தால் அண்ணாமலையின் கால்களை வெட்டுவேன்” என ராஜ் தாக்கரே கூறியிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது என்றும், இது நாகரிக அரசியலுக்கு முற்றிலும் பொருந்தாத வன்முறை மனப்பான்மையை வெளிப்படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ராஜ் தாக்கரேவின் இந்தப் பேச்சு, அண்ணாமலை என்ற தனிநபரை மட்டுமே அவமதிக்கும் செயலல்ல; அது ஒட்டுமொத்த தமிழ் மக்களையும், தமிழ் இனத்தின் மரியாதையையும் இழிவுபடுத்தும் வகையிலான பேச்சாகும் என சீமான் கடுமையாக சாடியுள்ளார்.
மேலும், அண்ணாமலை ஒரு தனிநபர் அல்ல; அவர் முதலில் ஒரு தமிழ்த்தேசிய இனத்தின் மகன் என்றும், அவரை குறிவைத்து பேசப்படும் வன்முறை மொழிகள், தமிழர் அடையாளத்தையே அவமதிக்கும் செயலாக பார்க்கப்பட வேண்டும் என்றும் சீமான் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
அரசியல் கருத்து வேறுபாடுகள் இருப்பது ஜனநாயகத்தில் இயல்பானது எனக் கூறிய சீமான், அதற்காக வன்முறையை தூண்டும் பேச்சுகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும், கட்சி, அரசியல், கொள்கை, கோட்பாடு ஆகிய அனைத்தையும் தாண்டி, தமிழ் இனத்தின் மகனாக அண்ணாமலைக்கு துணை நிற்போம் என்றும் உறுதியளித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், சீமானின் இந்த அதிரடி அறிவிப்பு, தமிழக அரசியலில் கட்சி எல்லைகளைத் தாண்டிய ஆதரவாக பேசப்பட்டு வருகிறது.