சென்னையில் பிரதமர் பங்கேற்கும் மாநாடு – இடம் இறுதி செய்ய பாஜக தீவிர நடவடிக்கை
வரும் 23-ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறவிருந்த பிரமாண்ட பொதுக்கூட்டம், மதுரையிலிருந்து சென்னைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், மாநாட்டிற்கான இடத்தை தேர்வு செய்யும் பணியில் பாஜக தலைமை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
முதலில் மதுரையில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த இந்த மாநாடு, சென்னையில் நடத்தப்படும் என நேற்று அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து, இன்று காலை முதலே பாஜக நிர்வாகிகள் மாநாட்டு இடங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
சென்னையில் உள்ள கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பழைய மகாபலிபுரம் சாலை பகுதிகளில் மாநாட்டை நடத்த ஏற்ற இடங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில், காஞ்சிபுரம் அருகேயும் சில இடங்கள் பரிசீலனையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாநாட்டிற்கான இடம் இறுதி செய்யப்பட்ட பின்னர், இதுகுறித்து இன்று மாலை சென்னையில் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளதாகவும், அந்த கூட்டத்திற்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமை வகிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.