திமுக கொடிக்கம்பம் அமைக்கும் போது மின்விபத்து – இளைஞர் உயிரிழப்பு
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகையை முன்னிட்டு, சென்னை அருகே முட்டுக்காடு பகுதியில் திமுக கொடிக்கம்பம் நிறுவும் பணியில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கத்தைச் சேர்ந்த மெய்யப்பன் (29) திருமணமானவர்; குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார்.
இன்று காலை, சென்னை கிழக்கு கடற்கரை சாலை முட்டுக்காடு பகுதியில் உள்ள தனியார் பீச் ரிசார்ட்டில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தனியார் அமைப்புகள் இணைந்து நடத்திய இந்தியாவின் முதல் ‘ஐயன்மேன் 5i50 டிரையத்லான்’ மற்றும் டியோஸ்கா டூயத்லான் போட்டிகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் பங்கேற்பதால், போட்டி ஏற்பாட்டாளர்கள் முட்டுக்காடு பகுதியில் உள்ள தனியார் பொழுதுபோக்கு பூங்கா எதிரே, சென்னை ஈசிஆர் சாலையின் மையத் தடுப்பில் கொடிக்கம்பம் நிறுவும் பணியை மேற்கொண்டனர். அந்த பணியில் அச்சரப்பாக்கத்தைச் சேர்ந்த மெய்யப்பன் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, மையத் தடுப்பில் கடப்பாரை கொண்டு குழி தோண்டியபோது, அடியில் சென்றுகொண்டிருந்த மின்சார கேபிளில் கடப்பாரை பட்டதால் மெய்யப்பன் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.
சம்பவத்தை பார்த்த அருகிலிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்போரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டபோதும், மெய்யப்பன் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் கானத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தது.
தகவலின் பேரில் மருத்துவமனைக்கு வந்த கானத்தூர் போலீசார், உடலை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.