ரியல் எஸ்டேட் மனப்பாங்கில் உலக அரசியல் – ட்ரம்பின் கிரீன்லாந்து ஆசை
கிரீன்லாந்து விற்பனைக்கு உட்பட்ட நிலப்பரப்பு அல்ல என்று டென்மார்க் அரசும் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களும் தெளிவாக அறிவித்திருந்தாலும், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அந்தப் பகுதியை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டும் என்ற நோக்கில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். கிரீன்லாந்து மக்களை நிதி ஊக்கங்களால் கவர்ந்து, அமெரிக்காவுடன் இணைக்க சதி திட்டங்கள் வகுக்கப்படுகின்றன என வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முதல் முறையாக அதிபர் பொறுப்பேற்ற காலத்திலேயே, டென்மார்க்கின் தன்னாட்சி பகுதியாக உள்ள கிரீன்லாந்தை அமெரிக்க எல்லைக்குள் இணைக்க விரும்புவதாக ட்ரம்ப் வெளிப்படையாக தெரிவித்திருந்தார். தற்போது இரண்டாவது முறையாக அதிபர் பதவியை ஏற்றுள்ள நிலையில், அந்த விருப்பத்தை நிறைவேற்றும் முயற்சிகளில் அவர் மேலும் தீவிரம் காட்டி வருகிறார்.
கடந்த வாரம் வெனிசுலா அதிபர் மற்றும் அவரது மனைவியை கைது செய்து சிறையில் அடைத்த சம்பவத்துக்குப் பிறகு, ட்ரம்பின் கவனம் முழுமையாக கிரீன்லாந்து நோக்கி திரும்பியுள்ளதாகக் கூறப்படுகிறது. அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்காக கிரீன்லாந்து அவசியம் என வலியுறுத்தியுள்ள அவர், தேவையானால் ராணுவ நடவடிக்கையையும் மேற்கொள்ள தயங்கமாட்டோம் எனவும் கூறியிருந்தார்.
நேட்டோ அமைப்பில் டென்மார்க் ஒரு உறுப்பினராக இருக்கும் நிலையில், அந்நாட்டுக்கு எதிராக அமெரிக்கா படையெடுப்பது அந்த அமைப்பின் அடிப்படையையே குலைக்கும் என டென்மார்க் பிரதமர் மெட்டே ஃப்ரெட்ரிக்ஸன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கிடையில், கிரீன்லாந்தில் அமெரிக்க படைகள் காலடி எடுத்து வைத்தால், முதலில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட பிறகே விளக்கம் கேட்கப்படும் என டென்மார்க் அதிகாரப்பூர்வமாக எச்சரித்துள்ளது.
அமெரிக்காவின் இந்த நிலப்பரப்பு ஆசைக்கு எதிராக, டென்மார்க் உட்பட ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தலைவர்கள் இணைந்து கண்டன அறிக்கை வெளியிட்டனர். கிரீன்லாந்து விற்பனைக்குரிய சொத்து அல்ல என்றும், அந்த நிலம் அங்கு வாழும் மக்களுக்கே சொந்தமானது என்றும் கிரீன்லாந்து பிரதமர் ஜென்ஸ்–ஃபிரடெரிக் நீல்சன் தெரிவித்தார். அமெரிக்காவுடன் இணைப்பு அல்லது கையகப்படுத்தல் போன்ற யோசனைகளை அவர் வெளிப்படையாக நிராகரித்தார்.
இந்த நிலையில், ராணுவம் மற்றும் இராஜதந்திரம் மட்டுமின்றி, கிரீன்லாந்தில் வசிக்கும் சுமார் 57,000 மக்களுக்கும் நிதி லாலசை காட்டும் திட்டத்தையும் அமெரிக்கா பரிசீலித்து வருகிறது. ஒவ்வொருவருக்கும் ரூ.8 லட்சம் முதல் ரூ.80 லட்சம் வரை வழங்கி, மொத்தமாக சுமார் ரூ.50,000 கோடி செலவிட்டால், அமெரிக்காவுடன் இணைவதற்கு மக்களின் ஒப்புதல் பெறலாம் என்ற விவாதங்கள் வெள்ளை மாளிகையில் நடந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்த தொகையை எவ்வாறு வழங்குவது, எந்த காலக்கட்டத்தில் வழங்குவது, எந்த விதிமுறைகளின் அடிப்படையில் வழங்குவது போன்ற விவரங்கள் இன்னும் தெளிவாகவில்லை. டென்மார்க்கின் பொருளாதார உதவியை நம்பியுள்ள கிரீன்லாந்து மக்களுக்கு நேரடியாக பணம் வழங்குவது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தலாம் என சில அமெரிக்க அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இதுகுறித்து கிரீன்லாந்து பிரதமர் ஜென்ஸ்–ஃபிரடெரிக் நீல்சன், இத்தகைய கற்பனை திட்டங்கள் தேவையற்றவை என தனது எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) பக்கத்தில் பதிவிட்டு அமெரிக்காவை கடுமையாக விமர்சித்துள்ளார். அமெரிக்கா சில பசிபிக் நாடுகளுடன் பாதுகாப்பு ஒப்பந்தங்கள் செய்திருந்தாலும், அவை அனைத்தும் சுதந்திரமான நாடுகளாகவே உள்ளன என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதேபோல், கிரீன்லாந்து முதலில் டென்மார்க்கிலிருந்து முழுமையான சுதந்திரத்தைப் பெற வேண்டுமென்ற கருத்தும் நிலவுகிறது. அந்த நிலையில்தான், மக்களை நிதியால் கவர்ந்து டென்மார்க்கிலிருந்து பிரிக்க அமெரிக்கா முயற்சி செய்கிறது என கூறப்படுகிறது. சுதந்திரத்திற்கு ஆதரவு இருந்தாலும், பொருளாதார சிக்கல்கள் காரணமாக இதுவரை பொதுவாக்கெடுப்பு நடத்தப்படவில்லை.
பல ஆய்வுகள், கிரீன்லாந்து மக்கள் அதிக சுயாட்சி விரும்பினாலும், அமெரிக்காவின் ஒரு பகுதியாக மாற விரும்பவில்லை என்பதைக் தெளிவுபடுத்துகின்றன.
அதிபர் பதவியில் இருந்தாலும், ரியல் எஸ்டேட் வியாபாரியின் மனப்பாங்குடன் செயல்படும் ட்ரம்பின் இந்த நடவடிக்கைகள், உலக அரசியல் அரங்கில் பெரும் குழப்பத்தையும் பதற்றத்தையும் உருவாக்கி வருகின்றன.