பாஜக அச்சப்படாது; திமுகவுக்கு உரிய பதில் வழங்கப்படும்
தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் திமுகவினருடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, பாஜக மாநில இளைஞரணி தலைவர் எஸ்.ஜி. சூர்யாவை, பாஜக நிர்வாகி கராத்தே தியாகராஜன் உள்ளிட்டோர் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கராத்தே தியாகராஜன், பத்திரிகையாளர் என்ற பெயரில் திமுகவிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டு வன்முறையில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டப்படும் செந்தில்வேல் மீது வருமான வரித்துறை சோதனை நடத்த வலியுறுத்த உள்ளதாக தெரிவித்தார்.
நடந்த தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து, மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனின் அனுமதியுடன், வரும் திங்கட்கிழமை சென்னையின் முக்கிய பகுதிகளில் முற்றுகைப் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.
இத்தகைய தாக்குதல்களால் பாஜக தொண்டர்கள் அஞ்சமாட்டார்கள் என்றும், தேவைப்பட்டால் அதே அளவிலான அரசியல் போராட்டங்களை முன்னெடுக்கவும் தயாராக உள்ளோம் என்றும் அவர் எச்சரித்தார். எல்லா நிலைகளிலும் இறங்கி திமுகவினருக்கு உரிய பதிலடி வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இந்த விவகாரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் பாஜக தேசிய செயல் தலைவர் ஆகியோருக்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், செந்தில்வேலின் வங்கி கணக்குகள், நிதி பரிவர்த்தனைகள் உள்ளிட்டவை தீவிரமாக விசாரிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும், வள்ளியூரில் செந்தில்வேல் கட்டி வரும் ஆடம்பர வீட்டிற்கான நிதி ஆதாரம் குறித்து வருமான வரித்துறை விசாரணை நடத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.