ராசிபுரம் புதிய பேருந்து நிலைய கட்டுமானத்தை உடனடியாக நிறுத்தக் கோரிக்கை
நீதிமன்ற உத்தரவை மீறி மேற்கொள்ளப்பட்டு வரும் ராசிபுரம் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி, பேருந்து நிலைய மீட்பு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் நகராட்சி ஆணையரிடம் எழுத்துப்பூர்வ புகார் மனுவை சமர்ப்பித்தனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள அணைப்பாளையம் பகுதியில், சுமார் 10 கோடியே 58 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. தேசிய நெடுஞ்சாலைக்கு அருகாமையில் இந்த பேருந்து நிலையம் அமைக்க திட்டமிடப்பட்ட நிலையில், அதற்காக இடம் ஒதுக்கப்பட்டதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அந்த வழக்கில், நகராட்சி நிர்வாகம் டெண்டர் செயல்முறைகளை மேற்கொள்ளக் கூடாது என்று நீதிமன்றம் தெளிவான உத்தரவை பிறப்பித்திருந்தது. இருப்பினும், அந்த உத்தரவை புறக்கணித்து கட்டுமானப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு, தற்போது சுமார் 80 சதவீதம் பணிகள் முடிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சூழலில், நீதிமன்றத்தின் தீர்ப்பை முழுமையாக நடைமுறைப்படுத்தி, மீதமுள்ள கட்டுமான பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கோரி, பேருந்து நிலைய மீட்பு கூட்டமைப்பைச் சேர்ந்த ஒருங்கிணைப்பாளர்கள் நகராட்சி ஆணையரிடம் முறையிட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கூட்டமைப்பின் நிர்வாகிகள், தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு ஆதாயம் ஏற்படுத்தும் நோக்கில், நீர்வழி வாய்க்காலை ஆக்கிரமித்து பேருந்து நிலையம் கட்டப்படுவதாக குற்றம்சாட்டினர். மேலும், நீதிமன்ற உத்தரவுக்கு உரிய மதிப்பளித்து, புதிய பேருந்து நிலையத்தின் கட்டுமானத்தை உடனடியாக நிறுத்த நகராட்சி ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.