விமானப் போக்குவரத்து துறையின் ‘ஊபர்’ என அழைக்கப்படும் JetSetGo நிறுவனம்
வெற்றி பெற வயது, பாலினம், குடும்பப் பின்னணி போன்றவை தடையல்ல என்பதை தன் வாழ்க்கை மூலமாக நிரூபித்தவர் கனிகா டெக்ரிவால். இந்தியாவின் முன்னணி பெண் தொழில்முனைவோர்களில் ஒருவராக இன்று அவர் திகழ்கிறார். அவர் யார்?, அவர் செய்த சாதனைகள் என்ன?, சமீப காலமாக அவர் குறித்து பேசப்படுவதற்கான காரணம் என்ன? என்பதுதான் தற்போது பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
உலகின் சுமார் 50 நாடுகளில் வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு வரும் பிரபல தொழில்முனைவு நிகழ்ச்சி தான் Shark Tank. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் தொழில்முனைவோர் தங்கள் வணிக யோசனைகளை முதலீட்டாளர்கள் முன் விளக்குவார்கள். யோசனை சிறப்பாக இருந்தால், நடுவர் குழுவில் இருக்கும் முதலீட்டாளர்கள் அதில் முதலீடு செய்ய முன்வருவார்கள். இல்லையெனில், நிகழ்ச்சியை பார்ப்பவர்களிடமிருந்தே முதலீடு கிடைக்கும் வாய்ப்பும் உருவாகும். இந்நிலையில், இந்தியாவில் ஒளிபரப்பாகும் Shark Tank India நிகழ்ச்சியின் 5வது சீசன் தற்போது தொடங்கியுள்ளது.
இந்த சீசனில் நடுவராக இடம்பெற்றுள்ள முக்கிய தொழிலதிபர்களில் ஒருவர்தான் கனிகா டெக்ரிவால். அவரது வாழ்க்கைப் பின்னணியும், போராட்டங்களும், சாதனைப் பயணமும் தான் இப்போது அதிகமாக பேசப்படுகிறது.
1990 ஆம் ஆண்டு மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் பிறந்த கனிகா டெக்ரிவால், ஒரு 90ஸ் கிட். 2011 ஆம் ஆண்டு, அவர் 21 வயதில் இருந்தபோது, Hodgkin’s Lymphoma எனப்படும் ரத்த புற்றுநோய் அவரை தாக்கியது.
இந்த நோய், உடலின் நோயெதிர்ப்பு அமைப்பின் முக்கிய பகுதியாக உள்ள நிணநீர் மண்டலத்தை கடுமையாக பாதிக்கும் தன்மை கொண்டது. இதனால், கனிகா டெக்ரிவால் 24 மணி நேரமும் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்க வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டார்.
அதோடு, தொடர்ந்து 9 மாதங்கள் கீமோதெரபி சிகிச்சையும் மேற்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டது. சிகிச்சை அளித்த மருத்துவர்கள், அவரது உடல்நிலை மிக மோசமான கட்டத்தை எட்டியுள்ளதாகவும், அவர் இன்னும் சில மாதங்கள் மட்டுமே உயிருடன் இருப்பார் என்றும் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவருடைய வயதையொத்த பலர் இத்தகைய சூழ்நிலையில் மனம் தளர்ந்து போயிருப்பார்கள். ஆனால் கனிகா டெக்ரிவால் அப்படிச் செய்யவில்லை. தன்னம்பிக்கையுடன் இருந்த அவர், அந்த நிலையிலேயே விமானத் துறையை சார்ந்த ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனத்தை தொடங்க விருப்பம் இருப்பதாக தனது தந்தையிடம் கூறினார்.
மருத்துவமனையில் இருந்த சுமார் ஒரு ஆண்டு காலத்தை, தனது தொழில்முனைவு கனவுக்கான திட்டமிடலுக்காக முழுமையாக பயன்படுத்திக் கொண்டார். ஒரு வருட சிகிச்சைக்கு பின்னர், அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் புற்றுநோயிலிருந்து அவர் மீண்டெழுந்தார்.
அதனைத் தொடர்ந்து, தனது கனவான ஸ்டார்ட்அப் நிறுவனத்தை நடைமுறைப்படுத்தும் பணியில் தீவிரமாக இறங்கினார். அவரது யோசனை வழக்கமான ஒன்றல்ல.
பொதுவாக விமானப் பயணம் என்றால், பல பயணிகளுடன் சேர்ந்து பயணிப்பதே வழக்கம். இதற்கு மாற்றாக, விமானங்களையும் ஹெலிகாப்டர்களையும் தனிநபர் பயன்பாட்டிற்காக வாடகைக்கு வழங்க முடிந்தால் எப்படி இருக்கும் என்ற புதிய சிந்தனையே கனிகா டெக்ரிவாலின் யோசனையாக இருந்தது.
அந்த எண்ணத்தின் விளைவாக உருவான நிறுவனமே JetSetGo. வெறும் 5,600 ரூபாய் முதலீட்டில் இந்த நிறுவனத்தை தொடங்கிய அவர், கூடுதல் முதலீட்டை திரட்ட பல முதலீட்டாளர்களை நேரில் சந்தித்து முயற்சி செய்தார்.
ஆனால், வயது குறைவு, பெண் என்பதுபோன்ற காரணங்களால் பல இடங்களில் அவரது யோசனையும், அவரும் நிராகரிக்கப்பட்டதாக கனிகா டெக்ரிவால் பின்னாளில் தெரிவித்துள்ளார்.
என்றாலும் மனம் தளராமல், தொடர்ந்து முயற்சி செய்து தேவையான முதலீட்டை திரட்டினார். அதன் பின்னர் விமானங்களையும், ஹெலிகாப்டர்களையும் குத்தகைக்கு எடுத்து, அவற்றை தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு வாடகைக்கு வழங்கத் தொடங்கினார்.
ஆரம்பத்தில் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை. இருப்பினும், தனது வணிக யோசனையின் மீது கொண்ட உறுதியான நம்பிக்கையால் அவர் பின்வாங்கவில்லை.
இந்த தொடர்ந்த முயற்சியின் பலனாக, வெறும் 5,600 ரூபாயில் தொடங்கிய JetSetGo நிறுவனம் இன்று கனிகா டெக்ரிவாலுக்கு சுமார் 420 கோடி ரூபாய் மதிப்புள்ள நிகர சொத்தைக் கொண்டு வந்துள்ளது. மேலும், Hurun நிறுவனம் வெளியிட்ட இந்தியாவின் இளம் செல்வந்தர்கள் பட்டியலிலும் அவர் இடம் பெற்றுள்ளார்.
கார் அல்லது பைக் போன்றவற்றை செயலி மூலம் முன்பதிவு செய்வதைப் போல, விமானங்களையும் ஹெலிகாப்டர்களையும் வாடகைக்கு வழங்கும் முறை காரணமாக, JetSetGo நிறுவனம் இந்திய விமானத் துறையின் ‘ஊபர்’ என அழைக்கப்படுகிறது.
இதற்குப் பிறகும், விமான மேலாண்மை சேவைகள், விமான பராமரிப்பு, தொழில்நுட்ப ஆலோசனைகள் போன்ற பல்வேறு சேவைகளையும் இந்த நிறுவனம் வழங்கி வருகிறது. இதுவரை 6,000 முறைக்கும் அதிகமாக JetSetGo விமானங்கள் வாடகைக்கு வழங்கப்பட்டுள்ளன. அதன்மூலம், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் இதுவரை பயணம் செய்துள்ளனர்.
புற்றுநோய் போன்ற உயிருக்கு ஆபத்தான நோயாக இருந்தாலும், பொருளாதார சிக்கல்களாக இருந்தாலும், வயது அல்லது பாலினம் எதுவாக இருந்தாலும், வெற்றிக்கான பாதையில் அவை தடையல்ல என்பதையே கனிகா டெக்ரிவாலின் வாழ்க்கைப் பயணம் எடுத்துக்காட்டுகிறது.
இதனால்தான், புதிய தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கும் Shark Tank நிகழ்ச்சியில் அவர் நடுவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த நிகழ்ச்சியின் மூலம் இந்தியாவில் மேலும் பல புதிய தொழில்முனைவோர்கள் உருவாக கனிகா டெக்ரிவால் முக்கிய பங்கு வகிப்பார் என பலரும் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.