உள்பிரிவு மோதலால் இடிக்கப்பட்ட இடும்பன் சன்னதி – தருமபுரியில் பரபரப்பு
தருமபுரி அருகே அமைந்துள்ள முருகன் ஆலயத்தில் புதுப்பிப்பு செய்யப்பட்ட கட்டுமானம், கோஷ்டி மோதல் காரணமாக இடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி நகராட்சி 33வது வார்டுக்குட்பட்ட அன்னசகரம் பகுதியில் உள்ள விநாயகர்–சிவசுப்ரமணியர் கோயில், இந்து சமய அறநிலையத்துறையின் மேலாண்மையில் செயல்பட்டு வருகிறது.
இந்த ஆலயத்தில் வரும் 16ஆம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளதால், தற்போது புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த பணிகளின் ஒரு பகுதியாக, கோயில் வளாகத்தில் முருகப்பெருமான் சன்னதிக்கு அருகில் உள்ள பழுதடைந்த இடும்பன் சன்னதியை அகற்றி, மண்டபத்துடன் கூடிய புதிய இடும்பன் சன்னதி கட்டும் பணிகள் நடந்து வந்தன.
ஆனால், இடும்பன் சன்னதி பழைய வடிவமைப்பிலேயே மாற்றமின்றி இருக்க வேண்டும் என்று ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், நள்ளிரவு நேரத்தில் எதிர் தரப்பைச் சேர்ந்தவர்கள் கட்டுமானப் பணிகளை இடித்து அகற்றியதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக, இரு தரப்பினருக்கிடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளதால், அசம்பாவிதங்களைத் தவிர்க்க கோயில் முன்பாக காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.