ஜல்லிக்கட்டு காளைகளை அலங்கரிப்பதில் அதிகரிக்கும் மக்களின் ஆர்வம்
மதுரை மாவட்டம் மேலூர் சுற்றுவட்டார பகுதிகளில், ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க உள்ள காளைகளை தயார்படுத்துவதிலும், அவற்றை அழகுபடுத்துவதிலும் பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பான விரிவான செய்தித் தொகுப்பை இங்கு பார்க்கலாம்.
பொங்கல் திருவிழா நெருங்கி வரும் சூழலில், தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான ஏற்பாடுகள் வேகமெடுத்து வருகின்றன. ஒருபுறம் விழாக்குழுவினர் கண்காணிப்பில் வாடிவாசல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மறுபுறம் காளை உரிமையாளர்கள் தங்களது காளைகளை போட்டிக்குத் தயார்செய்யும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
பயிற்சி அளிப்பது மட்டுமல்லாமல், ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளுக்கு அலங்காரம் செய்யவும் உரிமையாளர்கள் அதிக முக்கியத்துவம் வழங்கி வருகின்றனர். இதன் காரணமாக மேலூர் பகுதியில் சங்கு பாசி, மூக்கு கயிறு, கழுத்து நூல், பிடி கயிறு, நெத்திப்பாறை, வடகயிறு உள்ளிட்ட பொருட்களின் விற்பனை கணிசமாக உயர்ந்துள்ளது.
மேலும் கழுத்து சலங்கை, கால் சலங்கை, வெண்கல மணி, திருகாணி, குங்குமம் போன்ற அலங்காரப் பொருட்களையும் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்வதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகைகளில் குழந்தைகளுக்கு புத்தாடைகள் அணிவித்து மகிழ்வதைப் போலவே, தங்களது குடும்ப உறுப்பினர்களாக கருதும் காளைகளையும் அலங்கரித்து மகிழ்கிறோம் என காளை வளர்ப்போர் கூறுகின்றனர்.
ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான முன்னேற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில், இந்த பாரம்பரிய விளையாட்டை காண பொதுமக்களும் பெரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.