அரசியல் நிலவரத்தை பொறுத்தே ஆட்சியில் பங்கேற்பு குறித்து முடிவு – கார்த்தி சிதம்பரம்
அரசியல் சூழ்நிலையை அடிப்படையாகக் கொண்டு தான் ஆட்சியில் பங்கு கேட்பது குறித்து முடிவு செய்யப்படும் என காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற புதிய இல்லத்தின் திறப்பு விழாவில் கலந்துகொண்ட கார்த்தி சிதம்பரம், அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.
தவெக கூட்டணியில் காங்கிரஸ் இணையும் வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், காங்கிரஸ் கட்சி தற்போது இந்தியா கூட்டணியின் ஒரு அங்கமாக இருப்பதாகவும், தேசிய அளவில் அந்த கூட்டணிக்கு காங்கிரஸ் தலைமையே வகிப்பதாகவும் தெரிவித்தார். தமிழ்நாட்டை பொருத்தவரை, திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
ஆட்சியில் பங்கு கேட்பீர்களா என்ற கேள்விக்கு, அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தலில் போட்டியிடுவது ஆட்சியை கைப்பற்றவே என்றும், இல்லையெனில் வெறும் பொதுச் சேவை செய்யலாம் என்ற நிலை இருக்காது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
வேட்பாளர்கள் வெற்றி பெற்று, ஆட்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கும் சூழலில், எந்தக் கட்சியும் அந்த உரிமையை கோருவது இயல்பானது என்றும், அதே நிலை காங்கிரஸ் கட்சிக்கும் பொருந்தும் என்றும் அவர் விளக்கினார். இருப்பினும், ஆட்சியில் பங்கு பெறுவது என்பது அப்போது நிலவும் அரசியல் சூழலைப் பொறுத்தே தீர்மானிக்கப்படும் என்றும் கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.