சாராய ஆலைகள் இயங்கும் நிலையில் நடைபயணம் தொடக்கம் – இது வெறும் நாடகம் : தமிழிசை குற்றச்சாட்டு
சாராய ஆலைகளை நிறுத்தாமலும், போதைப்பொருள் ஒழிப்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்காமலும், போதைப்பொருளுக்கு எதிரான வைகோவின் நடைபயணத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்திருப்பது முழுக்க முழுக்க மக்கள் கண்களை மறைக்கும் நாடகமே என பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், புதுக்கோட்டையில் ஜார்ஜ் கோட்டையை கைப்பற்றுவதற்கான அரசியல் வியூகம் வகுக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.
மேலும், ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு, தேர்தலை மனதில் வைத்து செய்யப்பட்ட உச்சகட்ட நாடகமாகும் என்றும், தமிழக அரசு தொடர்ந்து மக்களை ஏமாற்றும் செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் குற்றம்சாட்டினார்.
மத்திய அரசுடன் இணக்கமாக செயல்படத் தவறியதாலேயே தமிழக அரசுக்கு கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
“சாராய ஆலைகளை மூடாத நிலையில், போதைப்பொருளுக்கு எதிராக நடைபயணம் மேற்கொள்வதால் என்ன பயன்?” எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
வைகோ மேற்கொள்ள வேண்டிய நடைபயணம் அறிவாலயத்திற்கே உரியது என்றும், போதைப்பொருளுக்கு எதிரான நடைபயணத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்திருப்பது முழுமையான போலி நடவடிக்கை என்றும் தமிழிசை செளந்தரராஜன் சாடினார்.