திண்டுக்கல் அருகே காவல் நிலையக் கட்டடத்தில் ஏறி தற்கொலை முயற்சி – வடமாநில இளைஞர் மீட்பு
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி பகுதியில் உள்ள காவல் நிலையக் கட்டடத்தின் மேற்பகுதியில் ஏறி தற்கொலை செய்ய முயன்ற வடமாநில இளைஞரை, பொதுமக்களின் உதவியுடன் தீயணைப்பு துறையினர் பாதுகாப்பாக மீட்டனர்.
சாணார்பட்டி அருகேயுள்ள ஒரு அடகுக் கடையின் மாடிப்பகுதியில், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த கோவிந்த் ஷா என்பவர் உறங்கிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனை பார்த்த அடகுக் கடை உரிமையாளர், அவரை திருடன் என சந்தேகித்து விரட்டியதாக தெரிகிறது.
இதனால் அச்சமடைந்த கோவிந்த் ஷா, அருகிலிருந்த காவல் நிலையக் கட்டடத்தின் மேல்தளத்திற்கு ஏறி, அங்கிருந்து கீழே குதித்து உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், உடனடியாக தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், பொதுமக்களின் துணையுடன் பாதுகாப்பு வலை அமைத்து தயார் நிலையில் நின்றனர்.
இதனைத் தொடர்ந்து, காவல் நிலையத்தின் மேற்பகுதிக்குச் சென்ற இரண்டு தீயணைப்பு வீரர்கள், தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட இளைஞரை சாமர்த்தியமாக பிடித்து பாதுகாப்பாக மீட்டு, காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.