திருத்தணி தாக்குதல் சம்பவம்: தன்னிச்சையாக விசாரணை தொடங்க வேண்டும் – தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு பாஜக கோரிக்கை
திருத்தணி பகுதியில் இளைஞர் சூரஜ் கடுமையாக தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் எழுதியுள்ள மனுவில், திருத்தணியில் நடந்த இந்த வன்முறைச் சம்பவம், சமூகத்தில் இளைஞர்களிடையே அதிகரித்து வரும் குற்றப் பழக்கங்கள், போதைப்பொருள் பயன்பாடு மற்றும் வன்முறையை சாதாரணமாகக் கருதும் மனப்பாங்கை வெளிப்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நான்கு சிறார்களில் மூவரை சிறுவர் சீரமைப்பு மையத்திற்கு அனுப்பி வைத்துள்ளதையும், ஒருவரை பெற்றோர் கண்காணிப்பில் விடுவித்துள்ளதையும் சுட்டிக்காட்டிய அவர், இந்த விவகாரத்தில் மனித உரிமைகள் ஆணையத்தின் தலையீடு மிக அவசியம் என தெரிவித்துள்ளார்.
மேலும், காவல்துறையின் செயல்பாடு, பாதிக்கப்பட்ட இளைஞருக்கு வழங்கப்பட்ட மருத்துவ சிகிச்சை, அவருக்கு கிடைத்த ஆதரவு நடவடிக்கைகள் ஆகியவற்றில் மனித உரிமை மீறல்கள் நடந்திருக்க வாய்ப்பு உள்ளதா என்ற சந்தேகமும் எழுவதாக அவர் கூறியுள்ளார்.
எனவே, இந்த தாக்குதல் சம்பவத்தை தேசிய மனித உரிமைகள் ஆணையம் தன்னிச்சையாக எடுத்துக்கொண்டு முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று ஏ.என்.எஸ். பிரசாத் வலியுறுத்தியுள்ளார்.