“மகசூல் நல்லா கிடைத்தா கூட பலன் இல்லை!” — டெல்டா விவசாயிகளின் வேதனை
காவிரி டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டுக்கான குறுவை சாகுபடி சிறப்பாக விளைந்திருந்தாலும், விளைச்சலை விற்பனை செய்ய முடியாததால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
காவிரி டெல்டா பகுதிகளில் விவசாயிகள் குறுவை, சம்பா, தாளடி என முப்பெரும் நெல் சாகுபடிகளை மேற்கொள்கின்றனர். மேட்டூர் அணையிலிருந்து ஆண்டுதோறும் ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டு ஜனவரி 28 ஆம் தேதி மூடப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, வாய்க்கால் மற்றும் வடிகால் தூர்வாரும் பணிகள் வழக்கமாக நடைபெறும்.
2016–17 ஆம் ஆண்டில் போதிய மழை இல்லாததால் கடும் வறட்சி ஏற்பட்டது. பின்னர் 2018 இல் கஜா புயலும், அதன்பிறகு ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவமழையின் வெள்ளப் பாதிப்புகளும் டெல்டா விவசாயிகளைப் பெரிதும் சிரமப்படுத்தின. அந்தக் காலங்களில் அரசு நிவாரண உதவிகளை வழங்கியது.
ஆனால், இந்த ஆண்டு வறட்சியும் இல்லை, வெள்ளமும் இல்லை — மாறாக குறுவை சாகுபடி மிகுந்த விளைச்சலை அளித்தது. ஏக்கருக்கு சராசரியாக 2 முதல் 4 டன் வரை நெல் மகசூல் கிடைத்துள்ளது. எனினும், நெல் கொள்முதல் நிலையங்களில் தாமதம் ஏற்பட்டதால் பல இடங்களில் நெல் முளைத்து வீணாகி விட்டது. இதனால், “மகசூல் கிடைத்தும் பலன் கிடைக்கவில்லை” என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து காவிரி விவசாயிகள் செயற்பாட்டாளர் வழக்கறிஞர் வெ. ஜீவக்குமார் கூறியதாவது:
“இந்த ஆண்டு டெல்டா மாவட்டங்களில் வரலாற்றிலேயே சிறந்த குறுவை மகசூல் கிடைத்துள்ளது. ஆனால் அதனை விவசாயிகள் வீடுகளுக்குக் கொண்டு சேர்க்க முடியவில்லை. 2016–17 இல் வறட்சி காரணமாகவும், 2023 இல் மழை காரணமாகவும் பயிர்கள் கெட்டன. இப்போது நல்ல விளைச்சல் இருந்தும் பலன் இழந்துள்ளனர்.
மேலும், பலர் பயிர் காப்பீடு பிரீமியம் செலுத்தியிருந்தாலும், சோதனை அறுவடை மேற்கொள்ளப்படவில்லை. எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு காப்பீட்டு இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என அவர் வலியுறுத்தினார்.