டாஸ்மாக் கடையில் கூடுதல் வசூல் – மதுபிரியருடன் ஊழியர் கடும் வாக்குவாதம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில், மதுபாட்டிலுக்கு அதிகமாக வசூலிக்கப்பட்ட 10 ரூபாயை திருப்பிக் கேட்ட மதுபிரியருடன் ஊழியர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவத்தின் வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
தமிழகமெங்கும் டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களுக்கு கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் கூறைநாடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
அங்கு, ஒரு மதுபிரியர் 500 ரூபாய் கொடுத்து மதுபாட்டில்களை வாங்கிய போது, நிர்ணயிக்கப்பட்ட விலையை விட மேலதிகமாக 10 ரூபாய் வசூலிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர், “எதற்காக கூடுதல் தொகை வசூலிக்கப்படுகிறது?”, “அரசாங்கமே இதற்கு அனுமதி அளித்ததா?” என கேள்வி எழுப்பி, ஊழியருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
தொடர்ந்து, ஊழியர் 5 ரூபாயை மட்டும் திருப்பி அளித்ததாகவும், மீதமுள்ள 5 ரூபாயை யார் தருவார்கள் என மதுபிரியர் கேள்வி எழுப்பியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த முழு சம்பவத்தையும் பதிவு செய்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி, வைரலாகி வருகிறது.