கோவை: கருஞ்சிறுத்தை குட்டி உயிரிழந்தது – காரணம் இன்னும் உறுதி இல்லை
கோவை பகுதியில் கண்டெடுக்கப்பட்ட கருஞ்சிறுத்தை குட்டியின் மரணத்திற்கான உண்மை காரணம், பிரேதப் பரிசோதனை முடிந்த பிறகே தெளிவாகும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மருதமலை அடிவாரத்தில் உள்ள ஒரு குகையில், தாயின்றி தனியாக இருந்த கருஞ்சிறுத்தை குட்டியை வனத்துறை ஊழியர்கள் முதலில் கண்டறிந்தனர்.
இதனைத் தொடர்ந்து, அந்த குட்டியை தாய்சிறுத்தையுடன் மீண்டும் சேர்க்கும் முயற்சியில் வனத்துறை ஈடுபட்டு வந்தது. ஆனால் சில மணி நேரங்களுக்குப் பிறகு ஆய்வு செய்தபோது, அந்த குட்டி அங்கிருந்து மாயமானது.
இதனால், உடனடியாக இரண்டு தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட்டு வனப்பகுதியில் தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அந்த தேடுதலின் போது, குகையிலிருந்து சுமார் 300 மீட்டர் தூரத்தில் கருஞ்சிறுத்தை குட்டி உயிரற்ற நிலையில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த குட்டி உயிரிழந்ததற்கான துல்லியமான காரணம், பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே உறுதி செய்யப்படும் என வனத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.