திருப்பூர் அய்யம்பாளையத்தில் முறையான மின்சாரம் வழங்கக் கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
திருப்பூர் மாவட்டம் அய்யம்பாளையம் பகுதியில், தொடர்ச்சியான மின்வெட்டுகளை கண்டித்து, முறையான மின்சார விநியோகம் வழங்கக் கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அய்யம்பாளையம் ஸ்ரீநகர் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளதாகவும், இப்பகுதியில் கடந்த சில மாதங்களாக குறிப்பாக காலை நேரங்களில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருவதாகவும் குடியிருப்புவாசிகள் குற்றம் சாட்டினர். இதனால் மாணவர்களின் கல்வி, வேலைக்குச் செல்லும் பொதுமக்களின் அன்றாட நடவடிக்கைகள், வீட்டு உபயோகங்கள் அனைத்தும் கடுமையாக பாதிக்கப்படுவதாக அவர்கள் தெரிவித்தனர்.
மின்வெட்டு தொடர்பாக பலமுறை மின்வாரிய அலுவலகத்தில் நேரில் புகார் அளித்தும், தொலைபேசி வாயிலாக தெரிவித்தும் இதுவரை எந்தத் தீர்வும் எடுக்கப்படவில்லை எனவும் பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர். அதிகாரிகளின் அலட்சியமே இந்த பிரச்சினைக்கு காரணம் என குற்றம்சாட்டிய அவர்கள், தங்களின் கோரிக்கைகள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக கூறினர்.
இதனால் ஆத்திரமடைந்த அய்யம்பாளையம் ஸ்ரீநகர் பகுதி குடியிருப்புவாசிகள், தங்கள் கழுத்தில் கோரிக்கை வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை மாலை போல அணிந்து, கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது, உடனடியாக மின்சார விநியோகத்தை சீரமைக்க வேண்டும் என்றும், நிலையான தீர்வு வழங்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
ஆர்ப்பாட்டம் குறித்து தகவல் அறிந்த மின்வாரிய அதிகாரிகள், விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.