பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நபின் – புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி சந்திப்பு
புதுச்சேரிக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக வந்துள்ள பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நபின், திலாஸ்பேட்டையில் உள்ள புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியின் இல்லத்திற்கு நேரில் சென்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
பாஜக தேசிய செயல் தலைவராக பொறுப்பு ஏற்றுள்ள பின்னர், நிதின் நபின் மேற்கொள்ளும் முக்கிய அரசியல் பயணங்களில் ஒன்றாக இந்த புதுச்சேரி வருகை அமைந்துள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் என்.ஆர். காங்கிரஸ் – பாஜக கூட்டணி அரசு தற்போது ஆட்சியில் உள்ள நிலையில், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பாஜக, இந்த சிறிய மாநிலத்தில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.
கூட்டணி ஆட்சியை தொடர்ச்சியாகத் தக்க வைத்துக்கொள்வதுடன், வரும் தேர்தலில் அதிக தொகுதிகளில் போட்டியிடவும் பாஜக திட்டமிட்டு வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சூழலில், நிதின் நபினின் புதுச்சேரி பயணம் முக்கிய அரசியல் நகர்வாகக் கருதப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை அவரது இல்லத்தில் சந்தித்த நிதின் நபின், மாநில அரசியல் நிலவரம் மற்றும் வளர்ச்சி தொடர்பான விஷயங்களில் விரிவாக கலந்துரையாடியதாக கூறப்படுகிறது.
இதற்கு முன்பாக, மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, புதுச்சேரி பாஜக மேலிட பொறுப்பாளர் சுரானா, சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், பாஜக மாநில தலைவர் ராமலிங்கம் உள்ளிட்டோர், முதலமைச்சர் ரங்கசாமியுடன் அப்பா பைத்திய சுவாமி கோயிலில் வழிபாடு மேற்கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, மாநிலத்தின் வளர்ச்சி தொடர்பாக பாஜக தேசிய செயல் தலைவருடன் கருத்துப் பரிமாற்றம் நடைபெற்றதாகவும், புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.