மரியா கொரினாவுக்கு நோபல் அமைதி பரிசு – நார்வே தூதரகத்தை மூடிவிட்டது வெனிசுலா!
வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோவுக்கு 2025ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நார்வேயில் உள்ள தனது தூதரகத்தை மூடுவதாக வெனிசுலா அரசு அறிவித்துள்ளது.
வெனிசுலாவில் ஜனநாயகத்திற்காக பல ஆண்டுகளாகப் போராடி வருபவர் மரியா கொரினா. தன்னுடைய தைரியம் மற்றும் தொடர்ச்சியான அரசியல் போராட்டத்தால் அவர் “வெனிசுலாவின் இரும்புப் பெண்மணி” என அழைக்கப்படுகிறார்.
அமைதிக்கான நோபல் பரிசு நார்வே நாடாளுமன்றத்தால் நியமிக்கப்பட்ட சுயாதீன குழுவினரால் வழங்கப்படும் ஒன்றாகும். இருப்பினும், வெனிசுலா அரசு இந்த முடிவை கடுமையாக எதிர்த்து, நார்வே அரசை குற்றம் சாட்டியுள்ளது.
நோபல் குழு நார்வே அரசின் வெளிநாட்டு கொள்கையுடன் சம்பந்தமற்றது என்று தெளிவுபடுத்தியிருந்த போதிலும், வெனிசுலா தனது நார்வே தூதரகத்தை மூடும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.