ட்ரம்ப் தலைமையில் காசா அமைதி ஒப்பந்தம் உறுதி – இஸ்ரேல், ஹமாஸ், ஈரான் பங்கேற்கவில்லை

எகிப்தில் நடைபெற்ற காசா அமைதி மாநாட்டில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் முன்னிலையில் அமைதி ஒப்பந்தம் உறுதிசெய்யப்பட்டது.

முன்னதாக, ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்த 20 இஸ்ரேலிய பிணைக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். அதேபோல், இஸ்ரேல் சிறைகளில் இருந்த 154 பாலஸ்தீனர்கள்வும் விடுவிக்கப்பட்டனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக இஸ்ரேல் ராணுவம் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கிடையே நடந்த போரை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியில், ட்ரம்ப் நடத்திய பேச்சுவார்த்தையால் 9-ம் தேதி அமைதி உடன்பாடு ஏற்படுத்தப்பட்டது. அதன் படி, 10-ம் தேதி முதல் காசாவில் போர்நிறுத்தம் நடைமுறைக்கு வந்தது.

அமைதி ஒப்பந்தத்தின் படி, ஹமாஸ் பிடியில் இருந்த கைதிகள் செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டு, பின்னர் பாதுகாப்பாக இஸ்ரேலுக்கு திரும்பினர். எனினும், ஹமாஸ் பிடியில் இருந்த 28 பேர் உயிரிழந்ததாகவும், அதில் 4 பேரின் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், இஸ்ரேல் சிறைகளில் இருந்த பாலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்பட்டனர். அவர்களில் பெரும்பாலோர் தங்கள் சொந்த இடமான காசாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அமைதி ஒப்பந்தத்தின் நிபந்தனைகளின் படி, ஹமாஸ் குழுவினர் காசாவை விட்டு எகிப்துக்கு அனுப்பப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இஸ்ரேலுக்கு சென்று, ஜெருசலேம் நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். அவர் கூறியதாவது:

“இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் முஸ்லிம் நாடுகளின் தலைவர்கள் இணைந்து காசா போர்நிறுத்தத்தை சாத்தியமாக்கினர். மத்திய கிழக்கில் புதிய அமைதிக்காலம் துவங்கியுள்ளது. இதுவரை எட்டு போர்களை நிறுத்தியுள்ளேன்.”

பின்னர், ட்ரம்ப் எகிப்தின் ஷர்ம் எல் ஷேக் நகரில் நடைபெற்ற காசா அமைதி உச்சிமாநாட்டில் பங்கேற்றார். இதில் எகிப்து அதிபர் அப்தெல் பட்டா அல் சிசி, ஐ.நா. பொதுச் செயலர் அந்தோனியோ குத்தேரஸ், இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உள்ளிட்ட 31 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்தியா சார்பில் வெளியுறவுத் துறை இணை அமைச்சர் கீர்த்திவர்தன் சிங் மாநாட்டில் பங்கேற்றார்.

மாநாட்டின் நிறைவில், ட்ரம்ப் முன்னிலையில் காசா அமைதி ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாக உறுதிசெய்யப்பட்டது.

எகிப்து அரசு சார்பில் இஸ்ரேல், ஹமாஸ், ஈரான் ஆகிய நாடுகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த மூன்று தரப்பினரும் மாநாட்டில் பங்கேற்கவில்லை.

Facebook Comments Box