‘புதுமை சார்ந்த வளர்ச்சி’ – 2025 பொருளாதார நோபல் பரிசு மூவருக்கு வழங்கப்பட்டது!
2025ஆம் ஆண்டுக்கான பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு ஜோயல் மோகிர் (Joel Mokyr), பிலிப் அகியோன் (Philippe Aghion), மற்றும் பீட்டர் ஹோவிட் (Peter Howitt) ஆகியோருக்கு கூட்டாக வழங்கப்படுகிறது. புதுமை மற்றும் பொருளாதார வளர்ச்சி தொடர்பான அவர்களின் முக்கியமான ஆய்வுகளுக்காக இப்பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில், பொருளாதாரத்துக்கான பரிசு தற்போது அறிவிக்கப்பட்டது.
இந்த ஆண்டின் பொருளாதார நோபல் பரிசு ஜோயல் மோகிர், பிலிப் அகியோன், பீட்டர் ஹோவிட் ஆகிய மூவருக்குப் பகிர்ந்து வழங்கப்படும். புதுமையால் ஊக்கமளிக்கப்பட்ட பொருளாதார வளர்ச்சி பற்றிய அவர்களின் ஆய்வுகள் உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்பட்டுள்ளது.
நோபல் குழுவின் தகவலின்படி, பரிசின் ஒரு பகுதி ஜோயல் மோகிருக்கு, மற்ற பகுதி பிலிப் அகியோன் மற்றும் பீட்டர் ஹோவிட் ஆகியோருக்குப் பகிர்ந்தளிக்கப்படும்.
தொழில்நுட்ப முன்னேற்றத்தின் மூலம் நீடித்த பொருளாதார வளர்ச்சிக்கான நிபந்தனைகளை விளக்கியதற்காக ஜோயல் மோகிர் தேர்வாகியுள்ளார். அதேபோல், பழைய பொருளாதார கொள்கைகளுக்குப் பதிலாக புதிய புதுமை சார்ந்த கொள்கைகள் மூலம் நீடித்த வளர்ச்சி பெறலாம் என்பதைக் காட்டியதற்காக பிலிப் அகியோன் மற்றும் பீட்டர் ஹோவிட் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
நெதர்லாந்தில் பிறந்த ஜோயல் மோகிர் தற்போது அமெரிக்காவின் நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றுகிறார்.
பிலிப் அகியோன் பாரிஸ் கல்லூரியில், பீட்டர் ஹோவிட் பிரவுன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்களாக உள்ளனர்.
நோபல் பரிசுகள் வரும் டிசம்பர் 10ஆம் தேதி ஸ்டாக்ஹோமில் நடைபெறும் விழாவில் வழங்கப்படவுள்ளன.