இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் – பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தகவல்
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்த ஆண்டுக்குள் இந்தியா வருவார் என்று இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்துள்ளார். இந்தியா–ரஷ்யா இராணுவ உறவுகளை மேம்படுத்தும் நோக்கில் அவர் ரஷ்யா சென்றிருந்தார்.
அஜித் தோவல், நேற்று அதிபர் புதினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், மாஸ்கோவில் உள்ள ‘இன்டர்ஃபேக்ஸ்’ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “ரஷ்ய அதிபர் புதின் இந்த ஆண்டில் இந்தியா வருகிறார்” என்று கூறினார்.
ரஷ்யா–உக்ரைன் போர் 2022ல் தொடங்கிய பிறகு, புதின் இந்தியா வருவது இதுவே முதல் முறை. கடந்த ஆண்டு, பிரதமர் நரேந்திர மோடி புதினை இரண்டு முறை சந்தித்தார். 2024 ஜூலையில் நடைபெற்ற இந்தியா–ரஷ்யா 22வது ஆண்டு உச்சி மாநாட்டில் பங்கேற்க, பிரதமர் மோடி ரஷ்யா சென்றிருந்தார். அப்போது, ரஷ்யாவின் மிக உயர்ந்த விருதான ‘ஆர்டர் ஆஃப் செயிண்ட் ஆண்ட்ரூ தி அபோஸ்டில்’ விருது மோடிக்கு வழங்கப்பட்டது.
பின்னர், கடந்த ஆண்டு அக்டோபரில் ரஷ்யாவின் காசான் நகரில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்ற போது, மோடி மீண்டும் புதினை சந்தித்தார். தற்போது, ரஷ்யாவில் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வருவதால், இந்தியாவிலிருந்து வரும் பொருட்களுக்கு 50% வரி விதிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். மேலும், உக்ரைன் மீது போரை நிறுத்தாவிட்டால், ரஷ்யா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு இரண்டாம் கட்ட பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
இதேநேரத்தில், ரஷ்யா–உக்ரைன் அமைதி ஒப்பந்தத்திற்கான அமெரிக்காவின் காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது. இந்த சூழலில், அமெரிக்க அதிபர் ட்ரம்பின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காப் ரஷ்யா சென்று, புதினை சந்தித்து, உக்ரைன் போரை முடிக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் விருப்பத்தை தெரிவித்தார்.
ரஷ்ய கிரெம்லின் மாளிகை வெளியிட்ட அறிவிப்பில், புதின் விரைவில் அமெரிக்க அதிபர் ட்ரம்பை சந்திப்பார் எனவும், சந்திப்பின் இடம் மற்றும் ஏற்பாடுகள் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதை ரஷ்ய வெளியுறவு ஆலோசகர் யூரி உஷாகோவும் உறுதி செய்துள்ளார்.