மொரோக்கோவில் இந்தியாவின் முதல் இராணுவ உற்பத்தி மையம் : நவராத்திரியில் தொடங்கிய புதிய அத்தியாயம்!
முதன்முறையாக வெளிநாட்டில் இந்தியா தனது இராணுவ உற்பத்தி மையத்தை தொடங்கியுள்ளது. அது ஆப்பிரிக்காவின் மொரோக்கோ நாட்டில் மிகப்பெரிய பாதுகாப்பு உற்பத்தி ஆலையாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்துள்ளார். இது, நாட்டின் இராணுவத் துறையில் வளர்ந்து வரும் உலகளாவிய விரிவாக்கத்தை பிரதிபலிக்கும் முக்கிய மைல்கல்லாகும்.
ஆப்பிரிக்காவின் மேற்குப் பகுதியில் உள்ள நாடு மொரோக்கோ. கிழக்கில் அல்ஜீரியா, தெற்கில் சஹாரா, மேற்கில் அட்லாண்டிக் பெருங்கடல், வடக்கில் மத்தியதரைக் கடல் என எல்லைகள் அமைந்துள்ளன. ஜிப்ரால்டர் நீரிணை ஸ்பெயினிலிருந்து மொரோக்கோவைப் பிரிக்கிறது. கடலில் சில கிலோமீட்டர் சென்றாலே ஸ்பெயினை அடையலாம். இதனால், புவியியல் ரீதியாக மொரோக்கோவுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு.
மொரோக்கோ மன்னர் முகமது VI, 2015-ல் பிரதமர் மோடியைச் சந்தித்ததிலிருந்து இந்தியா–மொரோக்கோ உறவுகள் வலுவடைந்தன. கடந்த மூன்று ஆண்டுகளில் பாதுகாப்பு உறவுகள் முன்னேறியுள்ளன. அதன் ஓர் பகுதியாக, இந்தியாவின் டாடா குழும நிறுவனமான Tata Advanced Systems Ltd., மொரோக்கோவின் காசாபிளாங்காவில் பாதுகாப்பு உபகரண உற்பத்தி ஆலையை நிறுவியுள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த நிறுவனம் வெளிநாட்டில் பாதுகாப்பு உற்பத்தி ஆலையை அமைத்தது இதுவே முதல் முறை. இந்த ஆலையில் மொரோக்கோ ராணுவத்துக்கான Wheeled Armoured Platforms எனப்படும் கவச வாகனங்கள் தயாரிக்கப்படுகின்றன. 20,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள இவ்வாலை, இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்புடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், உள்நாட்டு பாதுகாப்பு தொழில்நுட்பமும், இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு வலையமைப்பும் உலகளாவிய அங்கீகாரம் பெறுகின்றன. அனைத்து நிலப்பரப்பிலும் இயங்கும் திறன் கொண்ட, அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கவச வாகனங்கள் இங்கு தயாரிக்கப்படுகின்றன.
ஓராண்டுக்கு 100 வாகனங்கள் தயாரிக்கும் திறனுடன் இந்த ஆலையைக் கட்டமைத்துள்ளனர். இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் மொரோக்கோவைச் சென்றது இதுவே முதல் முறை. அங்கு டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் ஆலையைத் திறந்து வைத்தார். இருநாடுகளின் நட்புறவில் இது ஒரு வரலாற்று மைல்கல் என அவர் குறிப்பிட்டார்.
மொரோக்கோவின் பாதுகாப்புத் துறைக்கான ஆர்வத்தைப் பாராட்டிய அவர், இங்கு தயாராகும் கவச வாகனங்களில் 35% உள்ளூர் மூலப்பொருட்கள் பயன்படுத்தப்படுவதாகவும், அது விரைவில் 50% ஆக உயரும் என்றும் கூறினார். இதனால், மொரோக்கோவில் பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாகின்றன.
இந்த ஆலை திறப்பின் மூலம் இந்தியா ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பா பாதுகாப்பு சந்தைகளில் நுழைந்துள்ளது. மேலும், பாதுகாப்புத் தொழில், கூட்டு இராணுவப் பயிற்சி, திறன் மேம்பாட்டில் ஒத்துழைப்புக்கான ஒப்பந்தமும் கையெழுத்தாகியுள்ளது.
அதோடு, பயங்கரவாத எதிர்ப்பு, கடல்சார் பாதுகாப்பு, சைபர் பாதுகாப்பு, இராணுவ மருத்துவம், தொழில்நுட்ப பரிமாற்றம் ஆகியவற்றை உள்ளடக்கிய விரிவான செயல்திட்டமும் இருநாடுகளுக்கிடையே உருவாக்கப்பட்டுள்ளது.
“Make in India” வுடன் சேர்த்து “Make with Friends” மற்றும் “Make for the World” என்ற பிரதமர் மோடியின் நோக்கத்தை நனவாக்கும் விதமாக, மொரோக்கோவில் இந்த இராணுவ உற்பத்தி ஆலை கம்பீரமாக திகழ்கிறது.
இந்த ஆலை இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்தின் அடையாளமாக மட்டுமல்ல, உலகுக்கான புவிசார் அரசியல் செய்தியாகவும் விளங்குகிறது. அந்தச் செய்தி — இந்தியா பாதுகாப்புத் துறை உற்பத்தி மையமாக மட்டுமல்ல, உலக பாதுகாப்புக்கான உத்தரவாதமுமாக உள்ளது.