‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’… 1983-ஆம் ஆண்டில் ஸ்ரீநகரின் மைதானத்தில் ஒலித்த முழக்கம் – பூவா தலையா | அத்தியாயம்
இந்தியா மற்றும் பாகிஸ்தானில் கிரிக்கெட் விளையாட்டுக்கு எப்போதும் மக்களின் அதிக வரவேற்பு இருக்கும். அந்த அளவுக்கு மக்களின் உணர்ச்சிகளுடன் மிக நெருக்கமாக இணைந்தது கிரிக்கெட். அதனால்தான் இரு நாடுகளின் ரசிகர்களும் தங்கள் அணி வென்றால் கொண்டாடுவார்கள். உலகக் கோப்பையை பாகிஸ்தானுக்காக வென்ற இம்ரான் கான் பின்னர் அந்த நாட்டின் பிரதமராக ஆனார். இந்தியாவிலும் கிரிக்கெட் வீரர்கள் அரசியல் துறையில் வெற்றிப் படைத்துள்ளனர். இதேபோல், கிரிக்கெட்டுக்கு எப்போதும் இந்தியா மற்றும் பாகிஸ்தானில் மிகுந்த ஆதரவு உண்டு.
சமயங்களில் கிரிக்கெட் களத்தில் சில முழக்கங்கள் ரசிகர்கள் மூலம் முன்வைக்கப்படுகின்றன. உலகளவில் அதிகம் மக்கள் பார்க்கும் விளையாட்டுகளில் ஒன்றாக இருப்பதால் இதுபோன்ற நடவடிக்கைகள் நடக்கலாம். 2023 உலகக் கோப்பை தொடரில் அகமதாபாத் நகரில் ‘இந்தியா – பாகிஸ்தான்’ லீக் ஆட்டத்தில் பார்வையாளர்கள் ‘ஜெய் ஸ்ரீராம்’ என பாகிஸ்தான் வீரர்களை நோக்கி முழக்கமிட்டனர். அதே போல, ஐபிஎல் 2018-ஆம் ஆண்டு சீசனில் ‘காவிரி நீர்’ விவகாரத்தில் முன்னாள் சிஎஸ்கே வீரர் டூப்ளஸி மீது காலணி வீசிய சம்பவமும் நிகழ்ந்தது.
அப்படியொரு சம்பவம் 1983-ஆம் ஆண்டு இந்தியா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் ஆட்டத்தின் போதும் நிகழ்ந்தது. அந்த ஆட்டம் ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள ஷெர் இ காஷ்மீர் கிரிக்கெட் மைதானத்தில் நடந்தது. காஷ்மீரில் நடைபெற்ற முதல் சர்வதேச போட்டியாக இது அமைந்தது. அப்போது பார்வையாளர்கள் கூட்டத்தில் இருந்த சிலர் பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கமிட்டனர். தங்கள் கைகளில் பதாகைகளை ஏந்தி அதன் மூலமாக ஒரு அறிக்கையும் பிரசுரித்தனர்.
‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ – கபில் தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்ற காலம் அது. இதனால் உலக கிரிக்கெட் ஆர்வலர்களின் கவனம் இந்திய அணியின் பக்கம் திரும்பியது. அதே சூழலில் 1983-ஆம் ஆண்டு அக்டோபர் 13-ஆம் தேதி இந்த ஆட்டம் காஷ்மீரில் நடைபெற்றது. ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா முதலில் பேட் செய்து 176 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. மழை குறுக்கீடு காரணமாக மேற்கு இந்தியத் தீவுகள் அணி எளிதில் வெற்றி பெற்றது.
ஆட்டத்தின் உணவு நேர இடைவேளையில் சில பார்வையாளர்கள் மைதானத்துக்குள் நுழைந்து ஆடுகளத்தை சேதப்படுத்தினர். இதை ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பினர் செய்தனர். மேலும், இந்திய வீரர்களை நோக்கி கற்கள் மற்றும் பாட்டில்கள் வீசியுள்ளனர். இதை செய்தவர்களில் சிலர் பின்னர் தீவிரவாதிகளாக மாறியதாகவும் தகவல்கள் உள்ளன.
இந்திய அணி பீல்டிங் செய்தபோது, மாடத்தில் இருந்த பார்வையாளர்கள் இந்திய வீரர்களை வெறுப்பூட்டும் வகையில் Boo செய்தனர். சிலர் இம்ரான் கானின் படங்களை கையில் வைத்திருந்ததாகவும் தகவல் உள்ளது.
இந்த சம்பவம் நடக்காமல் இருந்திருந்தால், உலக கிரிக்கெட்டில் ஷெர்-இ-காஷ்மீர் மைதானம் முக்கிய மைதானமாக மாறியிருக்கும். ஏனெனில், அந்த மைதானத்தின் அமைப்பு அதற்கே உரியது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் இயற்கை சூழலுடன் சினார் மரங்களால் சூழப்பட்டு உள்ளது. சுமார் 12,000 பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து போட்டியை காணலாம். மேற்கு இந்தியத் தீவுகள் அணியுடன் நடந்த ஆட்டத்தை முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர் தனது சுயசரிதையில் எழுதியுள்ளார்.
‘அந்த போட்டியில் நான் கண்ட காட்சிகள் என் நினைவுகளில் உள்ளன. ஆட்டத்தில் தோல்வி ஏற்பட்டிருந்தால், ரசிகர்களின் ஏமாற்றத்தால் அப்படி நடந்ததாக புரிந்துகொள்ளலாம். ஆனால், முதல் பந்து வீசுவதற்கு முன்பே எங்களை நோக்கி கூச்சலிட ஆரம்பித்தனர். நம்ப முடியாமல் இருந்தது. களத்தில் நாம் மேற்கு இந்தியத் தீவுகள் அணியுடன் விளையாடினோம், பாகிஸ்தானுடன் அல்ல. ஆனால், பாகிஸ்தானுக்கு ஆதரவான முழக்கங்கள் அங்கு ஒலித்தன’ என்று கவாஸ்கர் குறிப்பிட்டுள்ளார்.
பின்னர் 1986-ஆம் ஆண்டு இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடந்தது. இதில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. அந்த போட்டிக்கு பிறகு, இந்த மைதானத்தில் மற்ற போட்டிகள் நடைபெறவில்லை. பாதுகாப்பு உள்ளிட்ட பல காரணங்கள் இதற்குக் கூறப்படுகின்றன.
பாதுகாப்பு படையினரின் கண்காணிப்பில் சில ஆண்டுகள் இந்த மைதானம் பயன்படுத்தப்பட்டது. பின்னர் அரசு மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டங்கள் இதில்தான் நடைபெற்றன. முதல் தர கிரிக்கெட் போட்டிகள் மற்றும் காஷ்மீர் ப்ரீமியர் லீக் போட்டிகள் அண்மையில் இதில் நடைபெற்றுள்ளன. பிசிசிஐ தலைவர் மிதுன் மன்ஹாஸ், ஜம்மு காஷ்மீர் அணிக்காக உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி உள்ளார். அவர் அந்த பகுதியில் பிறந்தவர். இதன் பின்னர் காஷ்மீரில் உள்ள பல தடைகளை கடந்து மீண்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை நடத்த முயற்சிக்கப்படுவார்.