இந்தியா 518 ரன்கள் குவித்து டிக்ளேர் – மேற்கு இந்தியத் தீவுகள் 4 விக்கெட்களை இழந்து தடுமாற்றம்

டெல்லியில் நடைபெற்று வரும் இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அதிரடியாக விளையாடி, 5 விக்கெட்களுக்கு 518 ரன்கள் குவித்ததும், தனது முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. கேப்டன் ஷுப்மன் கில் சதம் விளாசி அணியை முன்னிலையில் நிறுத்தினார்.

முதல் நாள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட்களுக்கு 318 ரன்கள் எடுத்திருந்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் 173 ரன்களுடன், ஷுப்மன் கில் 20 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

இரண்டாவது நாள் காலை ஜெய்ஸ்வால் ரன் அவுட் ஆனார். டேக்நரைன் சந்தர்பால் துல்லியமான த்ரோவில் விக்கெட்டைக் குலைத்து ஜெய்ஸ்வாலை பெவிலியனுக்கு அனுப்பினார். அவர் 258 பந்துகளில் 22 பவுண்டரிகளுடன் 175 ரன்கள் எடுத்தார்.

அதனைத் தொடர்ந்து களமிறங்கிய நித்திஷ் குமார் ரெட்டி அதிரடியாக விளையாடி 54 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார். எல்லைக்கோட்டில் கேட்ச் ஆன அவர் ஜோமல் வாரிக்கன் பந்தில் ஆட்டமிழந்தார்.

விக்கெட் கீப்பர் துருவ் ஜூரெல் 44 ரன்கள் எடுத்த நிலையில் ராஸ்டன் சேஸ் பந்தில் போல்டானார். மறுபுறம் நிலையாக விளையாடிய கேப்டன் ஷுப்மன் கில் 196 பந்துகளில் 16 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 129 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதன் பின்னர் இந்திய அணி 134.2 ஓவர்களில் 518 ரன்கள் எடுத்ததும், முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. மேற்கு இந்தியத் தீவுகள் அணியில் ஜோமல் வாரிக்கன் 3 விக்கெட்களையும், ராஸ்டன் சேஸ் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

அதன்பிறகு பேட்டிங் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி 2-வது நாள் முடிவில் 43 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழந்து 140 ரன்கள் மட்டுமே எடுத்தது. அலிக் அதானஸ் 41 ரன்களும், ஷாய் ஹோப் 31 ரன்களும் சேர்த்து தாக்குப்பிடிக்க முயன்றனர்.

இன்று (மூன்றாவது நாள்) ஆட்டம் நடைபெற்று வருகிறது; இந்தியா முதல் இன்னிங்ஸில் வலுவான நிலையைப் பெற்றுள்ளது.

Facebook Comments Box