அடுத்ததாக தனுஷ் நடிக்கும் படத்தை இயக்குவது மாரி செல்வராஜ் என உறுதி
திரைப்பட இயக்குநர் மாரி செல்வராஜ், தனது அடுத்த படத்தை நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்கவிருப்பதாக அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.
துருவ் விக்ரம் நடிப்பில் உருவான பைசன் திரைப்படத்தின் பணிகளை முடித்துள்ள மாரி செல்வராஜ், அதன் பின் எந்தப் படத்தை இயக்கப் போகிறார் என்ற கேள்வி குறித்து பல்வேறு ஊகங்கள் கிளம்பியிருந்தன. இதற்கிடையில், சமீபத்திய பேட்டியொன்றில் மாரி செல்வராஜ், “என் அடுத்த படம் தனுஷ் நடிப்பில் உருவாகும்” என்று கூறியுள்ளார்.
இந்தப் படத்தை தனுஷ் மற்றும் லேவ்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கவிருக்கின்றன. வரலாற்று பின்னணியில் அமைந்த இந்தப் படம் மிகப்பெரிய அளவில், அதிக பொருட்செலவில் உருவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தனுஷ் படத்திற்குப் பிறகு, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பன் உதயநிதி மற்றும் நடிகர் கார்த்தி ஆகியோரிடமும் கதைகளை சொல்லி, இருவரிடமிருந்தும் ஒப்புதல் பெற்றிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கார்த்தி நடிக்கும் படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, இன்பன் உதயநிதி நடிக்கும் படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
தற்போது, விக்னேஷ் ராஜா இயக்கும் படத்தில் நடித்து வரும் தனுஷ், அதை முடித்த பின் அமரன் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இந்த இரு படங்களின் பணிகளையும் நிறைவு செய்த பின், மாரி செல்வராஜ் இயக்கும் வரலாற்றுப் படத்தில் தனுஷ் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.