எட் ஷீரனுடன் இசை கூட்டணி – சந்தோஷ் நாராயணனுக்கு உலகளாவிய வாய்ப்பு!
உலகப் புகழ் பெற்ற ஆங்கில பாப் பாடகர் எட் ஷீரனுடன், இந்திய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இணைந்து பணியாற்றவிருக்கிறார்.
இங்கிலாந்தைச் சேர்ந்த எட் ஷீரன், உலகம் முழுவதும் மிகப் பெரிய ரசிகர் ஆதரவை பெற்றவர். அவரது ‘ஷேப் ஆஃப் யூ’ உள்ளிட்ட பல பாடல்கள் கோடிக்கணக்கான பார்வைகளை பெற்றுள்ளன. அண்மையில் இந்தியா வந்த அவர், ‘சஃப்பையர்’ பாடலுக்கான வீடியோவை படமாக்கியிருந்தார்; இதில் ஷாருக்கான் சிறப்பாக தோன்றினார்.
இந்தப் பின்னணியில், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது எக்ஸ் பக்கத்தில் (Twitter) “சர்வதேச அளவில் ஒரு முக்கிய கூட்டணி விரைவில் வெளியாக உள்ளது” என்று அறிவித்திருந்தார். சில மணி நேரத்திற்குப் பிறகு வெளியிட்ட பதிவில், எட் ஷீரன், ஹனுமான்கைண்ட், தீ ஆகியோருடன் இணைந்து பணியாற்றுவதாகவும், இதை தானே தயாரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்புக்குப் பிறகு, ரசிகர்கள் சமூக வலைதளங்களில் சந்தோஷ் நாராயணனுக்கு வாழ்த்துக்களை மழையென பொழிந்துள்ளனர். குறிப்பாக, ஹனுமான்கைண்ட் என்பது கேரளாவைச் சேர்ந்த சொல்லிசைப் (Rap) கலைஞர்; அவருடைய ஆல்பம் பாடல்கள் உலகம் முழுவதும் பிரபலமாக உள்ளன.