மீண்டும் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளாரா?
நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பில் தற்போது முழுமையாக ஈடுபட்டுள்ள ரஜினிகாந்த், அதே இயக்குநருடன் மீண்டும் இணைவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பு டிசம்பர் மாதத்துடன் நிறைவடைய உள்ளது. இதன் படப்பிடிப்பு நேரத்தில் நெல்சன், ரஜினியிடம் புதிய கதையொன்றை கூறியுள்ளார். அந்தக் கதை ரஜினிக்கு மிகவும் பிடித்ததாகவும், அதில் நடிக்க அவர் உடனே சம்மதம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
நெல்சன் தற்போது ‘ஜெயிலர் 2’ முடித்தவுடன் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார். இதனை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. அந்தப் படத்திற்குப் பிறகு, ரஜினி நடிக்கவுள்ள புதிய படத்தை நெல்சன் இயக்குவார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளிவந்த ‘ஜெயிலர்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதுவே ரஜினி – நெல்சன் கூட்டணிக்கு வித்திட்டது. அந்த வெற்றியைத் தொடர்ந்து, ‘ஜெயிலர் 2’ உருவாகி வருகிறது. இதில் யார் யார் நடிக்கிறார்கள் என்ற விவரம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
ரஜினி – நெல்சன் கூட்டணி மீண்டும் இணைவது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்